வெறும் 22 மரம்.. 38 ரன்ஸ்.. தனித்துவ சாதனையை சமன் செய்த குஜராத்.. ஹைதெராபாத்தை வீழ்த்தி வெற்றி

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 2ஆம் தேதி அகமதாபாத் நகரில் 51வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஹைதராபாத் டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் சொந்த மண்ணில் அபாரமாக விளையாடி 20 ஓவரில் 224/6 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 76, ஜோஸ் பட்லர் 64, சாய் சுதர்சன் 48 ரன்கள் எடுத்தார்கள்.

அந்த 20 ஓவர்களில் குஜராத் அணி வெறும் 22 டாட் பந்துகளை மட்டுமே எதிர்கொண்டது. அதாவது குஜராத் தாங்கள் எதிர்கொண்ட 120 பந்துகளில் 22இல் மட்டுமே ரன்கள் அடிக்கவில்லை. அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் குறைந்த டாட் பந்துகளை எதிர்கொண்ட அணி என்ற ஹைதராபாத் சாதனையை குஜராத் சமன் செய்துள்ளது.

- Advertisement -

தனித்து சாதனை:

இதற்கு முன் 2024ஆம் ஆண்டு மும்பைக்கு எதிராக ஹைதராபாத் அணியும் 22 டாட் பந்துகளை மட்டுமே எதிர்கொண்டுள்ளது. அதிரடியாக ரன்கள் அடித்து நொறுக்கப்படும் ஐபிஎல் தொடரில் எதிர்கொள்ளப்படும் டாட் பந்துகளுக்கு நிகராக மரங்கள் நடப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் இந்தப் போட்டியில் தனித்துவமான சாதனை படைத்துள்ள குஜராத் 22 மரங்கள் மட்டுமே நடுவதற்கு வித்திட்டுள்ளது.

ஹைதராபாத் அணிக்கு அதிகபட்சமாக ஜெய்தேவ் உனட்கட் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் 20 ரன்னில் ரசித் கான் அபார கேட்ச்சில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் தடுமாறிய இசான் கிசான் 13 (41) ரன்னில் அவுட்டானார்.

- Advertisement -

குஜராத் வெற்றி:

அடுத்த சில ஓவரில் மறுபுறம் அரை சதத்தை அடித்த அபிஷேக் ஷர்மாவும் 74 (41) ரன்னில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் ஹென்றிச் க்ளாஸென் 23, அன்கிட் வர்மா 3, நிதிஷ் ரெட்டி 21* (10), கேப்டன் கமின்ஸ் 19* (10) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் ஹைதெராபாத் 186-6 ரன்களை மட்டுமே எடுத்தது. அதனால் 10 போட்டிகளில் 7வது தோல்வியை சந்தித்த ஹைதராபாத் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற எஞ்சிய 4 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 4, 0, 4, 4, 4, 4.. ஷமியை தெறிக்க விட்டு சச்சினை முந்திய சுதர்சன் மிரட்டல் சாதனை.. கில் அதிரடியில் குஜராத் அசத்தல்

மறுபுறம் 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத்துக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதையும் சேர்ந்து 10 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்றுள்ள குஜராத் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதனால் அந்த அணி பிளே ஆஃப் சுற்றை நெருங்கியுள்ளது.

Advertisement