
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் இரண்டாம் தேதி பெங்களூருவில் 14வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பெங்களூருவுக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு 20 ஓவரில் போராடி 169-8 ரன்கள் எடுத்தனர். பிலிப்ஸ் சால்ட் 14, விராட் கோலி 7, கேப்டன் படிதார் 12 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
அதனால் 94-5 என தடுமாறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் லியாம் லிவிங்ஸ்டன் 54, ஜிதேஷ் சர்மா 33, டிம் டேவிட் 32 ரன்கள் எடுத்தனர். குஜராத்துக்கு அதிகபட்சமாக முகமத் சிராஜ் 3, சாய் கிசோர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்த விளையாடிய குஜராத்துக்கு கேப்டன் சுப்மன் கில் 14 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் சாய் சுதர்சன் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். அந்த வகையில் இரண்டாவது விக்கெட்டுக்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து குஜராத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்த இந்த ஜோடியில் சாய் சுதர்சன் அரை சதத்தை நழுவ விட்டு 49 ரன்னில் அவுட்டானார்.
மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் அரை சதத்தை அடித்து 73* (39) ரன்கள் அடித்தார். அவருடன் ரூத்தர்போர்ட் தமது பங்கிற்கு அதிரடியாக 30* (18) ரன்கள் எடுத்து ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 17.5 ஓவரில் 170-2 ரன்கள் எடுத்த குஜராத் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
இதன் வாயிலாக விக்கெட்டுகள் அடிப்படையில் குஜராத் தங்களது இரண்டாவது பெரிய வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இதற்கு முன் 2023இல் ராஜஸ்தானுக்கு எதிராக ஜெய்ப்பூரில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது அந்த அணியின் முதல் பெரிய வெற்றியாகும். மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய பெங்களூரு இந்த வருடத்தில் முதல் தோல்வியை பதிவு செய்தது.
இதையும் படிங்க: 169 ரன்ஸ்.. கேரியரில் செய்யாததை ஆர்சிபிக்கு எதிராக ஒரே நாளில் செஞ்சு பதிலடி கொடுத்த சிராஜ்.. லிவிங்ஸ்டன் அசத்தல்
இதையும் சேர்த்து தங்களது சொந்த ஊரில் இருக்கும் சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணி 44வது தோல்வியை பதிவு செய்துள்ளது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக தோல்விகளைப் பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையை பெங்களூரு சமன் செய்துள்ளது. இதற்கு முன் டெல்லி அணியும் தங்களது சொந்த ஊரில் உள்ள டெல்லி மைதானத்தில் 44 தோல்விகளை பதிவு செய்துள்ளது.