DC vs GT : போராடிய டெல்லி, கேன் வில்லியம்சன் இடத்தில் க்ளாஸ் காட்டிய இளம் வீரர் – தமிழக வீரர்களால் குஜராத் வென்றது எப்படி

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 4ஆம் தேதியன்று நடைபெற்ற 7வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. தலைநகர் டெல்லியில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டெல்லிக்கு இளம் வீரர் பிரிதிவி ஷா’வை 7 (5) ரன்களில் அவுட்டாக்கிய முகமது ஷமி அடுத்து வந்த மிச்சேல் மார்ஷை 4 (4) ரன்களில் கிளீன் போல்டாக்கினார். அதனால் ஏற்பட்ட சரிவில் நங்கூரத்தை போட முயன்ற கேப்டன் டேவிட் வார்னர் 7 பவுண்டரியுடன் 37 (32) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார்.

போதாகுறைக்கு அடுத்து வந்த ரிலீ ரோசவ் கோல்டன் டக் அவுட்டானதால் 67/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்று திண்டாடிய டெல்லியை காப்பாற்ற போராடிய அபிஷேக் போரெல் 20 (11) ரன்களில் அவுட்டாக மறுபுறம் அதிரடி காட்டிய நம்பிக்கை நட்சத்திரம் அக்சர் படேல் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 36 (22) ரன்கள் எடுத்துப் போராடி ஆட்டமிழந்தார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி 162/8 ரன்கள் எடுக்க குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி, ரஷீத் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் அல்சாரி ஜோசப் 2 விக்கெட்களும் சாய்ந்து அசத்தினர்.

- Advertisement -

வில்லியம்சன் க்ளாஸ்:
அதைத்தொடர்ந்து 163 ரன்களை துரத்திய குஜராத்துக்கு 2 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்ட ரிதிமான் சஹாவை 14 (7) ரன்களில் அவுட்டாக்கிய அன்றிச் நோர்ட்ஜெ தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில்லையும் 14 (13) ரன்களில் காலி செய்தார். போதாக்குறைக்கு அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 5 (4) ரன்களில் அவுட்டானதால் 54/3 என தடுமாறிய குஜராத்துக்கு அடுத்த ஜோடி சேர்ந்த தமிழக வீரர்கள் விஜய் சங்கர் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சரிவை சரி செய்ய போராடினார்கள்.

6வது ஓவரில் இணைந்த இவர்கள் 14வது ஓவர் வரை சற்று அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்து 4வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து குஜராத்தை ஓரளவு காப்பாற்றிய போது இம்பேக்ட் வீரராக வந்த விஜய் சங்கர் 3 பவுண்டரியுடன் 29 (23) ரன்களில் ஆட்டமிழந்து சென்றார். ஆனாலும் மறுபுறம் சீரான வேகத்தில் சிறப்பாக பேட்டிங் செய்த சாய் சுதர்சன் அரை சதமடித்து 4 பவுண்டர் 2 சிக்சருடன் 62* (47) ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் வெற்றியை உறுதி செய்தார்.

- Advertisement -

அவருடன் கடைசி நேரத்தில் தனது பாணியில் 2 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்ட டேவிட் மில்லர் அதிரடியாக 31* (16) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்ததால் 18.1 ஓவரிலேயே 163/4 ரன்கள் எடுத்த குஜராத் 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. மறுபுறம் பேட்டிங்கில் சற்று சுமாராக செயல்பட்ட டெல்லிக்கு பந்து வீச்சில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜெ 2 விக்கெட்களை சாய்த்து அசத்தியும் இதர பவுலர்கள் தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் இந்த சீசனில் பங்கேற்று 2 போட்டிகளிலும் 2வது தோல்வியை பதிவு செய்துள்ளது.

ஆனால் பந்து வீச்சில் கச்சிதமாக செயல்பட்ட குஜராத்துக்கு கடந்த போட்டியில் இம்பேக்ட் வீரராக உள்ளே வந்து வெற்றி பெற முக்கிய பங்காற்றிய சாய் சுதர்சன் இந்த போட்டியில் காயமடைந்ததால் நேரடியாக விளையாடும் வாய்ப்பு பெற்றார். அந்த இடத்தில் கேன் வில்லியம்சன் எப்படி விளையாடினால் இருக்குமோ அதே போல கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்தி குஜராத்துக்கு 2வது வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

இதையும் படிங்க: CSK : மிக குறுகிய காலத்திலேயே ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேவான் கான்வே ஆகியோர் சி.எஸ்.கே அணிக்காக – படைத்த சாதனை

குறிப்பாக 4வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த விஜய் சங்கர் – சாய் சுதர்சன் ஆகிய தமிழக வீரர்கள் குஜராத்தை வெற்றி பெற வைத்ததை பார்க்கும் தமிழக ரசிகர்கள் இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கொஞ்சம் பார்க்குமாறு சமூக வலைதளங்களில் கலாய்தது வருகிறார்கள்.

Advertisement