மும்பையைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் பிரிதிவி ஷா 2018 அண்டர்-19 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு கேப்டனாக முக்கிய பங்காற்றினார். அதே காரணத்தால் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்தார். அப்போது சச்சின், சேவாக், லாரா கலந்த கலவையை போல் அவர் விளையாடுவதாக அப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டினார்.
ஆனால் நாளடைவில் சுமாராக விளையாடிய பிரிதிவி ஷா அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள தவறினார். அதனால் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவர் ஐபிஎல் தொடரிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதே போல உள்ளூர் தொடரிலும் சுமாராகவே விளையாடிய அவர் ஃபிட்னஸ் கடை பிடிக்கவில்லை என்று சொல்லி ரஞ்சிக்கோப்பை அணியில் இருந்தும் கழற்றி விடப்பட்டுள்ளார்.
திறமையான பிரிதிவி:
இதற்கிடையே சொந்த வாழ்வில் சில சர்ச்சைகளை சந்தித்த அவருடைய கேரியர் இனிமேல் ஜொலிக்காது என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் அவருக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் கிரேக் சேப்பல் ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இது பற்றி அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “பிரிதிவி கடந்த காலம் உங்களைத் தீர்மானிக்காது. அது இங்கிருந்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்தது”
“இப்போதும் நீங்கள் உச்சத்திலேயே இருக்கிறீர்கள். உங்களுக்கு முன்னே இன்னும் சாதிப்பதற்கு நிறைய வருடங்கள் இருக்கிறது. இந்த நேரத்தை நீங்கள் எப்படிப்பட்ட கிரிக்கெட்டராகவும் நபராகவும் வர வேண்டும் என்பதை கற்பனை செய்ய எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு சிறந்த விளையாட்டு வீரர்களின் கதையிலும் பின்னடைவு ஒரு அங்கமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்”
சேப்பல் ஆதரவு:
“டான் ப்ராட்மேன் போன்ற ஜாம்பவான்கள் கூட அணியில் இருந்து நீக்கப்பட்டதற்காக ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்கள். அதனால் அவர்கள் மீண்டு வருவதற்கு போராட்டத்தையும் சந்தித்துள்ளார்கள். சவால்களை தவிர்ப்பது அல்ல ஆனால் அவர்கள் அவற்றிற்கு எவ்வாறு பதிலளித்தார்கள் என்பது தான் அவர்களை சிறந்தவர்களாக மாற்றியது. இப்படி கிரேக்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஸ்டீவ் ஸ்மித்தால் நிச்சயம் இந்தியாவுக்கு அந்த தலைவலி இருக்கும் – கிளென் மேக்ஸ்வெல் கருத்து
அத்துடன் இந்த மாற்றங்கள் பயிற்சி மற்றும் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் சூழ்நிலையை குறை சொல்லாமல் இங்கிருந்து வருவதற்கான புதிய பாதையை உருவாக்கி ஒழுக்கம், வாழ்க்கை முறை, ஃபிட்னஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு கிரேக் சேப்பல் அறிவுறுத்தியுள்ளார். ஏதாவது சந்தேகம், கேள்வி, உதவி தேவைப்பட்டால் தயங்காமல் தம்மிடம் கேட்குமாரும் பிரிதிவிக்கு திறந்த மனதுடன் கிரேக் சேப்பல் வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



