இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. அதன் காரணமாக இந்த கோப்பையானது இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்த தொடரில் இரு அணிகளுமே சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் 5 போட்டிகள் கொண்ட இந்த முழு தொடரும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. ஒவ்வொரு போட்டியுமே மிகச்சிறப்பாக நடைபெற்றதால் ரசிகர்களுக்கும் டெஸ்ட் போட்டிகளின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
இந்திய அணி அசத்த இவர்தான் காரணம் : கிரேக் சேப்பல் பாராட்டு
இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அனுபவ வீரர் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று வெளியேறி இருந்தனர். இதனால் சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்படி கில்லின் தலைமையில் இந்திய வீரர்கள் எவ்வாறு செயல்படப்போகிறார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இந்திய அணியின் செயல்பாடு இந்த தொடரில் திருப்திகரமாகவே அமைந்துள்ளது.
இந்த தொடரில் சுப்மன் கில், கே.எல் ராகுல், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் என பேட்ஸ்மேன்கள் பலரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார்கள். அதேவேளையில் பந்துவீச்சில் முகமது சிராஜ் மிகச் சிறப்பாக செயல்பட்டு ஒரு போட்டியில் கூட பணிச்சுமையை காரணம் காட்டி ஓய்வெடுத்துக் கொள்ளாமல் 5 போட்டிகளிலும் விளையாடினார்.
அப்படி ஓய்வின்றி விளையாடிய அவர் இந்த தொடர் முழுவதும் 185 ஓவர்கள் பந்துவீசி 23 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரராகவும் திகழ்ந்தார். இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை தாண்டி முகமது சிராஜின் இந்த செயல்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான கிரேக் சேப்பல் இந்த இங்கிலாந்து தொடரில் இந்திய அணி சாதிக்க முகமது சிராஜ் தான் காரணம் என தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது :
இந்த தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் பலரும் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் அவர்களை எல்லாம் தாண்டி இந்த தொடரானது சிறப்பாக அமைய காரணம் முகமது சிராஜ்தான். ஏனெனில் எப்போதுமே வெளிநாட்டு மண்ணில் மிகச் சிறப்பாக செயல்படக்கூடிய அவர் இந்த தொடரிலும் தனது அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். மெல்போன், காபா, பெர்த், லார்ட்ஸ், கேப்டவுன், ஃபர்மிங்காம், ஓவல் என எங்கு போட்டி நடைபெற்றாலும் சிராஜின் பந்துவீச்சு சிறப்பாக இருந்துள்ளது.
இதையும் படிங்க : ரோஹித், விராட் இல்லனா என்ன? அதெல்லாம் பிரச்சனை கிடையாது.. இந்திய அணியின் எதிர்காலம் குறித்து – கங்குலி பேச்சு
அதோடு பும்ரா இல்லாத போது அவர் இந்திய அணியை மிகச்சிறப்பாக வழி நடத்தியுள்ளார். இந்த தொடரில் 6 வாரங்கள் விளையாடுவது, 185 ஓவர்கள் அதுவும் இங்கிலாந்து கண்டிஷனில் வீசுவது எல்லாம் மிகச் சிறப்பான ஒன்று. இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற அவருடைய வேட்கையே அவரது இந்த சிறப்பான செயல்பாட்டிற்கு காரணம் என கிரேக் சேப்பல் அவரை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



