இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் இந்தியா ஒய்ட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற ஆஸ்திரேலிய தொடரை இந்திய அணி வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக நியூசிலாந்து தொடரில் இந்தியா தோல்வியை சந்திக்க விராட் கோலி – ரோஹித் சர்மா ஆகியோர் சுமாராக விளையாடி முக்கிய காரணமாக அமைந்தார்கள். அதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் அவர்கள் சிறப்பாக விளையாட இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். சொல்லப்போனால் 36 வயதை கடந்து விட்ட அவர்களை ஆஸ்திரேலிய தொடரிலும் சிறப்பாக செயல்படாத பட்சத்தில் கழற்றி விட பிசிசிஐ தயங்காது என்றே சொல்லலாம்.
ஜாம்பவான்களுக்கு அட்வைஸ்:
இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஆஸ்திரேலியாவில் கடைசி முறையாக சிறப்பாக விளையாடுவதற்கு அந்நாட்டின் முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் முக்கிய ஆலோசனை கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “2005ஆம் ஆண்டு வயதாகும் போது ஏன் பேட்டிங் செய்வது கடினமாகிறது கிரேக்?அது எளிதாக மாற வேண்டும் அல்லவா? என்று என்னிடம் சச்சின் டெண்டுல்கர் கேட்டார்”
“வயதுக்கேற்ப பேட்டிங்கின் மன தேவைகள் தீவிரமடைகின்றன என்பதை அவருக்கு நான் விளக்கினேன். அதாவது அனுபவம் பெறும் போது இந்த லெவலில் ரன்கள் குவிப்பது கடினம் என்பதை நீங்கள் உணர்வதால் பேட்டிங் செய்வது கடினமாகிறது. அது கண் பார்வை குறைவதால் போன்ற விஷயங்களால் அல்ல. வயதாகும் போது அசத்துவதற்கு மனதளவில் வலுவாக இருக்க வேண்டும். நீங்கள் இளமையாக இருக்கும் போது பந்தை பார்த்து அடிப்பீர்கள்”
இளமையா சிந்திங்க:
“ஆனால் வயதாகும் போது எதிரணியினர் உங்களுடைய பலவீனத்துக்கு எதிராக வேலை செய்வார்கள். நீங்களும் அதிகப்படியான விழிப்புணர்வு பெறுவீர்கள். எனவே நீங்கள் இளம் வீரரை போல் விளையாடுவதற்கு மீண்டும் இளம் வீரராக இருந்த போது செய்த செயல்முறைகளையும் சிந்தனைகளையும் பின்பற்ற வேண்டும். அதுவே வயதான வீரர்களுக்கு பெரிய சவாலாக இருக்கும். இத்தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை இந்த உணர்வு படம் பிடிக்கிறது”
இதையும் படிங்க: ப்ராட்மேனுக்கு கூட இப்படி நடந்துருக்கு.. இதை செஞ்சா சாதிக்க முடியும்.. பிரிதிவிவிக்கு கிரேக் சேப்பல் கடிதம்
“எதிரணியினர் அவர்களுடைய பலவீனங்களை ஆய்வு செய்து சிறிய தடுமாற்றத்தையும் பயன்படுத்தி வீழ்த்துவார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள்” என்று கூறினார். மேலும் இந்தியா சிறப்பாக செயல்படுவதற்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சமநிலையுடன் அசத்துவது அவசியம் என்று கிரேக் சேப்பல் அறிவுறுத்தியுள்ளார். ரோஹித், கோலி, ஸ்மித் ஆகியோர் எதிரணிக்கு எதிராக மட்டுமின்றி தங்களுடைய நேரத்துக்கு எதிராகவும் இத்தொடரில் போராட வேண்டும் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



