
ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றன. அப்போட்டி இந்தியாவில் உள்ள கிரேட்டர் நொய்டா நகரில் கடந்த செப்டம்பர் ஒன்பதாம் தேதி துவங்கியது. ஆனால் இதுவரை அப்போட்டியில் ஒரு பந்து கூட வீசப்படாமல் இருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக செப்டம்பர் எட்டாம் தேதி அங்கே பலத்த மழை பெய்தது.
இருப்பினும் செப்டம்பர் 9 தேதி மழை கொஞ்சம் கூட தெரியவில்லை. ஆனால் எட்டாம் தேதி பெய்த மழையால் மைதானத்தில் தேங்கிய தண்ணீரையும் ஈரப்பதத்தையும் வெளியேற்றுவதற்கு தாமதம் ஏற்பட்டது. போதாகுறைக்கு நொய்டா மைதானத்தில் தண்ணீரை வெளியேற்றுவதற்கான நவீன வசதிகளும் போதுமானதாக எந்திரங்களும் இல்லை.
அதனால் மைதான பராமரிப்பாளர்கள் வாலியில் தண்ணீரைப் பிழிந்தும் மின்சார காற்றாடிகளை வைத்தும் மைதானத்தை உலர வைத்தனர். அதன் காரணமாக இந்திய ரசிகர்களே ஏமாற்றமடைந்து பணக்கார வாரியமான ஆப்கானிஸ்தானுக்கு இப்படி ஒரு சுமாரான மைதானத்தை கொடுக்கலாமா? என்று விமர்சித்தனர். மறுபுறம் ஆப்கானிஸ்தானில் இதை விட சிறந்த வசதிகளைக் கொண்ட மைதானங்கள் இருப்பதாக அந்நாட்டு வாரியம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே செப்டம்பர் 11, 12 தேதிகளில் மீண்டும் அங்கு மழை பெய்ததால் இதுவரை போட்டி துவங்கவில்லை. இந்நிலையில் ஆகஸ்ட் 30ஆம் தேதியே நொய்டா மைதானத்திற்கு வந்த ஆப்கானிஸ்தான் அணியினர் இன்ட்ரா ஸ்குவாட் பயிற்சிப் போட்டியில் விளையாடி 300 ரன்கள் அடித்ததாக மைதானத்தின் மேனேஜர் ஷாஹீத் விஜய் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது தொடர்ந்து மழை பெய்வதால் யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
இது பற்றி 93.5 ரெட் வானொலியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆப்கானிஸ்தான் அணியினர் ஆகஸ்ட் 30ஆம் தேதியே வந்து செப்டம்பர் 1 – 2 வரை பயிற்சிப் போட்டியில் விளையாடி 300 ரன்கள் அடித்தனர். நாங்கள் அவர்களின் பயிற்சியாளர் ஜோனதன் ட்ராட் சொன்னது போல பிட்ச்சை அமைத்துக் கொடுத்தோம். இருப்பினும் அதிகமாக தொல்லை கொடுக்கும் மழை எங்கள் கையில் இல்லை”
இதையும் படிங்க: 357 ரன்ஸ்.. காயத்தை தாண்டி அசத்தும் ருதுராஜ்.. இஷான் கிசானுடன் 189 ரன்ஸ் பார்ட்னர்ஷிப் போட்ட இந்திரஜித்
“இந்த மைதானத்திற்கு அருகே உள்ள டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மழையால் சில 2024 டிபிஎல் போட்டிகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. ஆப்கானிஸ்தானுக்கு நொய்டா மைதானம் புதியதல்ல. இங்குள்ள சூழ்நிலைகள் பற்றி தெரியாமல் இருந்திருந்தால் ஆப்கானிஸ்தான் வாரியமும் எங்கள் மைதானத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்காது. சிலருக்கு ஏதாவது எழுத வேண்டும். ஆனால் அவர்களுக்கு உண்மையான நிலவரம் தெரியாது” என்று கூறினார்.