துன்பத்திலும் இன்பம் ஆனா ரொம்ப லேட் ! சென்னை கேப்டன்ஷிப் கைமாறல் பற்றி ரசிகர்கள் கருத்து

MS Dhoni Jadeja
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து கடந்த ஒரு மாதங்களாக மும்பை நகரில் பல எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பத்திலிருந்தே எதுவுமே சரியாக அமையவில்லை என்றே கூறலாம். ஏனெனில் 14 கோடி என்ற மிகப் பெரிய தொகையை செலவழித்து அந்த அணி நிர்வாகம் வாங்கிய தீபக் சஹர் ஆரம்பத்திலேயே காயத்தால் விலகியது பந்துவீச்சில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

Ravindra Jaddeja MS Dhoni

அதைவிட ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 முதல் தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக ஒவ்வொரு வருடமும் ஏராளமான வெற்றிகளை குவித்து 4 கோப்பைகளை வென்று கொடுத்து 2-வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சென்னையை தரம் உயர்த்திய எம்எஸ் தோனி முதல் போட்டி துவங்குவதற்கு ஒருசில நாட்கள் முன்பாக கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தது மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.

- Advertisement -

சொதப்பிய சென்னை:
ஆரம்பம் முதல் கடந்த வருடம் வரை தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக சென்னையை வெற்றிகரமான ஐபிஎல் அணியாக மாற்றிய அவரை “தல” என அந்த அணி ரசிகர்கள் கொண்டாடும் நிலையில் 40 வயதைக் கடந்து விட்ட காரணத்தால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்த அவர் முதல்முறையாக சாதாரண வீரராக விளையாடினார். மறுபுறம் ரவீந்திர ஜடேஜா ஒரு அற்புதமான ஆல்ரவுண்டர் என்றாலும் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லை என்பதால் அவருக்கு உறுதுணையாக எம்எஸ் தோனி செயல்பட்டு வந்தார். ஆனாலும்கூட வரலாற்றிலேயே முதல் 4 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வி அடைந்த சென்னை ஆரம்பத்திலேயே புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

CSK-1

அதன் காரணமாக முதல் வெற்றியைப் பெறுவதற்கு முன்பே ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்த முதல் சென்னை கேப்டன் என்ற பரிதாப சாதனை படைத்த ரவிந்திர ஜடேஜா அதன்பின் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தார். அதிலிருந்து வெற்றி நடைபோடும் என எதிர்பார்த்த சென்னை ரசிகர்களுக்கு குஜராத்திடம் மீண்டும் தோல்வியடைந்த அந்த அணி மும்பைக்கு எதிராக வென்று பஞ்சாப்புக்கு எதிராக மீண்டும் தோற்று கடுப்பேற்றியது.

- Advertisement -

சொதப்பிய ஜடேஜா:
அதைவிட சமீபத்திய இலங்கை தொடரில் கூட ஆல்-ரவுண்டராக ஜொலித்த ஜடேஜா அனுபவமில்லாத கேப்டன்சிப் பொறுப்பை ஏற்றதுமே கை கால் நடுங்கியது போல் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சொதப்பினார். அதிலும் 2020, 2021 போன்ற காலக்கட்டங்களில் தோனி ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் ஃபார்மின்றி தவித்த போது அவரின் இடத்தில் விளையாடி அற்புதமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் சென்னையின் புதிய பினிஷராக உதயமானார். ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற பின் இதுவரை அவரின் பேட்டில் இருந்து எந்த ஒரு பெரிய ரன்களும் வரவில்லை.

jadeja

குறிப்பாக உலகின் நம்பர்-1 பீல்டராக கருதப்படும் அவர் ஒரு முக்கிய போட்டியில் 2 எளிதான கேட்ச்களை கோட்டை விடும் அளவுக்கு கேப்டன்ஷிப் அழுத்ததில் சிக்கி தடுமாறினார். இப்படி கேப்டன்ஷிப் அழுத்தம் தனது ஆட்டத்தை முற்றிலுமாக பாதித்ததாக உணர்ந்த அவர் மீண்டும் சென்னையின் கேப்டன்சிப் பொறுப்பை எம்எஸ் தோனியிடமே வழங்குவதாக அறிவித்துள்ளார். அதை தோனியும் ஏற்றுக்கொண்டதால் மே 1-ஆம் தேதி நடைபெறும் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் தோனியை மீண்டும் கேப்டனாக பார்க்க போவதை எண்ணி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரொம்ப லேட்:
விரைவில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளதால் அதற்கு முன்பு மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பும் வகையிலும் சென்னையின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் அவர் எடுத்துள்ள இந்த தைரியமான முடிவு பாராட்டுக்குரியது என பல ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தொடர் தோல்விகளால் தவிக்கும் தங்களுக்கு இது ஒரு சிற்றின்பமாக அமைந்துள்ளது என்று ஒருசில சென்னை ரசிகர்கள் தெரிவிக்க பெரும்பாலான ரசிகர்கள் இந்த முடிவு ரொம்பவும் லேட் என்று கூறுகின்றனர்.

ஏனெனில் இதுவரை பங்கேற்ற 8 போட்டிகளில் 2 வெற்றிகள் 6 தோல்விகளை பதிவு செய்துள்ள சென்னை எஞ்சிய 6 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றால் கூட பிளே-ஆப் சுற்றுக்கு செல்வதற்கான 90% வாய்ப்பு குறைவாகவே காட்சி அளிக்கிறது. அதன் காரணமாக இந்த முடிவை ஒன்று ஜடேஜா முன்கூட்டியே எடுத்திருக்க வேண்டும் அல்லது பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே என்பதுபோல் ஜடேஜாவை கேப்டனாக்கும் முடிவை தோனி எடுத்திருக்கக் கூடாது என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ அன்று முதல் இன்று வரை கேப்டனாகவே பார்த்து பழகிய எம்எஸ் தோனியின் தலைமையில் அடுத்த 6 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்று அதிர்ஷ்டத்தின் உதவியுடன் சென்னை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் ஆழமாக ஏற்பட்டுள்ளது.

Advertisement