
இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நியூஸிலாந்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரில் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை 2வது போட்டியில் தோற்கடித்த நியூசிலாந்து பதிலடி கொடுத்தது. அந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி ஜனவரி 18ஆம் தேதி இந்தூரில் நடைபெற்றது.
அப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்து 50 ஓவரில் 337/8 ரன்களை குவித்தது. நியூசிலாந்துக்கு ஓப்பனிங் வீரர்கள் டேவோன் கான்வே 5, ஹென்றி நிக்கோலஸ் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
அதனால் 5/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய நியூஸிலாந்துக்கு நிதானமாக விளையாட முயற்சித்த வில் எங் 30 ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனால் அடுத்ததாக டார்ல் மிட்சேல் – கிளன் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்து இந்தியாவை வெளுத்து வாங்கினார்கள். அதில் மிகவும் அதிரடியாக விளையாடிய கிளன் பிலிப்ஸ் சதத்தை அடித்து 106 (88) ரன்கள் குவித்தார்.
அவருடன் சேர்ந்து அபாரமாக விளையாடிய டார்ல் மிட்சேல் மீண்டும் சதத்தை அடித்து 137 (131) ரன்கள் விளாசினார். இறுதியில் கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 28* (18), ஜாக் போல்க்ஸ் 10, கிறிஸ்டியன் கிளார்க் 11 ரன்களை அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர். இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
முன்னதாக இப்போட்டியில் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிளன் பிலிப்ஸ் – டார்ல் மிட்சேல் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலைக் கொடுத்து சதத்தை அடித்தார்கள். அத்துடன் 2வது விக்கெட்டுக்கு அவர்கள் 219 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நியூசிலாந்து ஜோடி என்ற சாதனையை மிட்சேல் – பிலிப்ஸ் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: நியூஸி 337 ரன்ஸ்.. கெய்ல், பாண்டிங்கை முந்தி இந்தியாவுக்கு எதிராக 2வது வரலாற்று சாதனை படைத்த மிட்சேல்
இதற்கு முன் 2017ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்துக்காக டாம் லாதம் – ராஸ் டெய்லர் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய சாதனை. அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக 2 நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் ஒரே போட்டியில் சதமடிப்பதும் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் வரலாற்றில் நிகழாத அந்த சாதனையை இன்று நியூசிலாந்துக்காக மிட்சேல் – பிலிப்ஸ் படைத்துள்ளார்கள்.