சதமடித்து காப்பாற்றிய நியூசிலாந்து வீரர் சாதனை – மிரட்டிய ஆசிய சாம்பியனின் கதையை முடித்தது எப்படி

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் அக்டோபர் 29ஆம் தேதியன்று குரூப் 1 பிரிவில் இடம் பிடித்துள்ள ஆசிய சாம்பியன் இலங்கையை நியூசிலாந்து எதிர்கொண்டது. புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு அனலாக பந்து வீசிய இலங்கை ஃபின் ஆலன் 1 (3), டேவோன் கான்வே 8 (13) என தொடக்க வீரர்களை ஆரம்பத்திலேயே அவுட்டாக்கி கேப்டன் கேன் வில்லியம்சனையும் 8 (13) ரன்களில் காலி செய்து மிரட்டியது.

அதனால் 4 ஓவரில் 15/3 என்ற மோசமான தொடக்கத்தை பெற்று தடுமாறிய நியூசிலாந்துக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த டார்ல் மிட்சேல் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் நிதானமாகவும் அதிரடியாகவும் ரன்களை சேர்த்தனர். 15 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தங்களது அணியை தூக்கி நிறுத்திய இந்த ஜோடியில் பெயருக்காக விளையாடிய டார்ல் மிட்சேல் 22 (24) ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய ஜிம்மி நீசம் 5 (8) ரன்களில் நடையை கட்டினார்.

- Advertisement -

மிரட்டல் சதம், மிரட்டல் பவுலிங்:
ஆனால் மறுபுறம் இலங்கைக்கு சிம்ம சொப்பனமாக மாறிய கிளன் பிலிப்ஸ் நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்தி 10 பவுண்டரி 4 சிக்ஸருடன் சதமடித்து 104 (64) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் வாயிலாக டி20 உலக கோப்பை வரலாற்றில் ஜாம்பவான் ப்ரண்டன் மெக்கலமுக்கு பின் (123 ரன்கள், வங்கதேசத்துக்கு எதிராக, 2012இல்) சதமடித்த 2வது நியூசிலாந்து வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்த அவர் ஒட்டுமொத்தமாக டி20 உலக கோப்பையில் சதமடித்த 10வது வீரர் என்ற பெருமையும் பெற்றார.

அவரது அதிரடியாலும் இறுதியில் மிட்சேல் சாட்னர் 11* (5) ரன்கள் எடுத்ததாலும் தப்பிய நியூசிலாந்து 20 ஓவரில் 167/7 ரன்கள் குவித்தது. இலங்கை சார்பில் அதிகபட்சமாக கௌசன் ரஜித்தா 2 விக்கெட்களை எடுத்தார். முன்னதாக புதிய பந்தில் மிரட்டலாக பந்து வீசிய இலங்கையை பார்த்த நியூசிலாந்து பவுலர்கள் “உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல” என்ற வகையில் 168 ரன்களை துரத்திய அந்த அணியை ஆரம்பத்திலேயே மிரட்டினார்கள். குறிப்பாக ட்ரெண்ட் போல்ட், டிம் சவுதி ஆகியோருக்கு பதில் சொல்ல முடியாமல் நிஷாங்கா 0 (5), குசால் மெண்டிஸ் 4 (3), டீ சில்வா 0 (3), அஸலங்கா 4 (8) கருனரத்னே 3 (8) என டாப் 5 பேட்ஸ்மேன்கள் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பினர்.

- Advertisement -

அதனால் 8/4 என தொடங்கி 24/5 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற இலங்கைக்கு மிடில் ஆர்டரில் பனுக்கா ராஜபக்சா அதிரடியாக 3 பவுண்டரி 2 சிக்சருடன் 34 (22) ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின் வந்த ஹஸரங்கா 4 (6) தீக்சனா 0 (3) என டெயில் எண்டர்கள் அவுட்டாகி சென்ற நிலையில் மறுபுறம் போராடிய கேப்டன் சனாக்காவும் 4 பவுண்டரி 1 சிக்ருடன் 35 (32) ரன்களில் அவுட்டானார். இறுதி வரை முழுமையாக தாக்குப் பிடிக்க முடியாத இலங்கை 19.2 ஓவரில் 102 ரன்களுக்கு சுருண்டு பரிதாபமாக தோற்றது.

அந்தளவுக்கு மிரட்டலாக பந்து வீசிய நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும் இஷ் சோதி மற்றும் மிட்சேல் சாட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் சாய்த்தனர். இதனால் 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து சூப்பர் 12 சுற்றின் குரூப் 1 புள்ளி பட்டியலில் பங்கேற்ற 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்து 5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை 90% பிரகாசப்படுத்தியுள்ளது.

இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் 15/3 என தடுமாறிய போது சதமடித்து சாதனை படைத்து காப்பாற்றிய கிளன் பிலிப்ஸ் சந்தேகமின்றி ஆட்டநாயக்கனாக அறிவிக்கப்பட்டார். மறுபுறம் பங்கேற்ற 3 போட்டிகளில் 2வது தோல்வியை பதிவு செய்த இலங்கை 2 புள்ளிகளுடன் 5வது இடத்தில் திண்டாடுகிறது. இதனால் சமீபத்தில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற அணிகளை தோற்கடித்து ஆசிய கோப்பையை வென்று ஆசிய சாம்பியனாக திகழும் அந்த அணி எஞ்சிய போட்டிகளில் வென்றால் கூட இந்த உலகக் கோப்பையில் அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பு 30 சதவீதமாக குறைந்துள்ளது.

Advertisement