
நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது குஜராத் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்கள் என்ற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது. இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 97 ரன்களையும், பிரியான்ஷ் ஆர்யா 47 ரன்களையும், ஷஷாங்க் சிங் 44 ரன்களையும் குவித்து அசத்தினர்.
அதனை தொடர்ந்து 244 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்கள் குவித்தது. அதன் காரணமாக 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்ஷன் 74 ரன்களையும், ஜாஸ் பட்லர் 54 ரன்களையும் குவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி சார்பாக விளையாடிய ஆஸ்திரேலிய வீரரான கிளென் மேக்ஸ்வெல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் :
நேற்றைய போட்டியில் அவர் டக் அவுட்டானதின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுவரை கிளென் மேக்ஸ்வெல் 19 முறை ஐபிஎல் போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் 18 முறை ஐபிஎல் போட்டிகளில் டக் அவுட்டாகியுள்ளனர்.
இதையும் படிங்க : அறிமுக போட்டியிலேயே 204 ஸ்ட்ரைக் ரேட்டுடன் பேட்டை சுழற்றிய பஞ்சாப் வீரர் – யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?
நேற்றைய இந்த போட்டியில் சாய் சுதர்சன் வீசிய பந்தில் தான் எல்.பி.டபுள்யூ என்று நினைத்து ரிவ்யூ கேட்காமலே மேக்ஸ்வெல் வெளியேறினார். ஆனால் ரீப்ளேவின் போது பந்து ஸ்டம்பை தாண்டி சென்றது தெரியவந்தது. ஒருவேளை அவர் ரிவ்யூ எடுத்து இருந்தால் அந்த மோசமான சாதனையில் இருந்து தப்பி இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.