
ஐபிஎல் 2025 விக்கெட் தொடரில் ஏப்ரல் 5ஆம் தேதி சண்டிகரில் நடைபெற்ற 18வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை ராஜஸ்தான் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் 206 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 67, ரியன் பராக் 43* ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப் அணிக்கு அதிகபட்சமாக லாக்கி பெர்குசன் விக்கெட்டுகளை எடுத்தார்.
அடுத்ததாக விளையாடிய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர். அதனால் 43-4 என தடுமாறிய பஞ்சாப் அணிக்கு இளம் வீரர் நேஹல் வதேரா – கிளேன் மேக்ஸ்வெல் ஆகியோர் ஜோடி சேர்ந்து 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு போராடினர்.
அதில் வதேரா அதிரடியாக விளையாடி அரை சதத்தை அடித்தார். அவருடன் சேர்ந்து மேக்ஸ்வெல் நன்றாக விளையாடி ஃபினிஷிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது மேக்ஸ்வெல் 30 (21) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே வதேராவும் 62 (41) ரன்னில் அவுட்டாகி சென்றார்.
இறுதியில் 20 ஓவரில் 155-9 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் தங்களது முதல் தோல்வியைப் பதிவு செய்தது. அதனால் இரண்டாவது வெற்றியைப் பெற்ற ராஜஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் 75 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே வரும் ஹேலி வால் நட்சத்திரம் போல மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் அபூர்வமாகவே அசத்துவதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஹேலியின் வால் நட்சத்திரம் சூரியனைச் சுற்றி வருகிறது. அது பூமியிலிருந்து 75 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெரியும். அது போலவே கிளென் மேக்ஸ்வெல் 75 போட்டிகளில் ஒரு நல்ல ஆட்டத்தை விளையாடுகிறார். அது கடைசியாக 1986இல் காணப்பட்டது. இப்போது காணப்படும் அது அடுத்ததாக 2061இல் காணப்படலாம். இதே தான் பேட்டிங்கில் மேக்ஸ்வெல்லின் நிலை. க்ளென் மேக்ஸ்வெல் ஹேலியின் வால் நட்சத்திரம்” என்று விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: எத்தனையோ பேர் இருந்தாலும் அடுத்த இந்திய கேப்டனாக அவர்தான் சரியா இருப்பார் – கபில் தேவ் கருத்து
அவர் கூறுவது போல அதிரடியான வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற பெயரைக் கொண்ட மேக்ஸ்வெல் 2012 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அதில் 3 முறை மட்டுமே அவர் 400க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார். 2024இல் பெங்களூரு அணிக்காக 10 போட்டிகளில் 52 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் தற்போது பஞ்சாப் அணியிலும் தடுமாறுகிறார்.