
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியில் இருந்து கம்பேக் வந்த இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவில் முன்னிலை பெற்றுள்ளது. அந்த வெற்றிக்கு கேப்டனாக செயல்பட்ட ஜஸ்ப்ரித் பும்ரா 8 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றினர்.
குறிப்பாக முதல் இன்னிங்ஸில் இந்தியா சுமாராக பேட்டிங் செய்து 150க்கு ஆல் அவுட்டானது. அப்போது இந்தியா தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அபாரமாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலியாவை 104 ரன்களுக்கு சுருட்ட உதவினார். இறுதியில் 534 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மீண்டும் 3 விக்கெட்டுகளை எடுத்த அவர் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ராவின் வெவ்வேறு பந்துகளை அவருடைய ஆக்சன் மற்றும் ரிலீஸ் பாயிண்ட் காரணமாக கணிப்பது கடினம் என்று கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். மேலும் அதிகமான விக்கெட்டுகள் எடுக்கவில்லை என்றாலும் பும்ரா வரலாற்றின் ஆல் டைம் கிரேட் வேகப்பந்து வீச்சாளராக வருவார் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“அவரது பவுன்சரும் அவருடைய லென்த் பந்தும் அவர் ரிலீஸ் பாயிண்ட் இருக்கும் இடத்திற்கு மிகவும் ஒத்திருப்பதைப் போல தெரிகிறது. அதனால் அவருடைய பந்துகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை எடுப்பது மிகவும் கடினம். ஏனெனில் அவருடைய பந்துகள் எப்போதும் உங்களை நோக்கி திரும்பி வருவது போல் உணர்கிறது. மேலும் பந்தை உங்களிடமிருந்து வெளியே நோக்கி எடுத்துச் செல்லும் திறமையும் அவரிடம் இருக்கிறது”
“அதனால் அவருடைய பந்துகளை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது. ஒருவேளை அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுவதால் அவரால் பெரிய விக்கெட்டுகள் எடுக்காமல் போகலாம். ஆனால் அவர் வரலாற்றின் மகத்தான வேகப்பந்து வீச்சாளராக வருவார். அவரை எதிர்கொள்வது மிக மிக கடினம். ஏனெனில் அவரிடம் தனித்துவமான ஆக்சன் இருக்கிறது”
இதையும் படிங்க: ரபாடாவை முந்தி மீண்டும் மகுடம் சூடிய பும்ரா.. 22 வயதிலேயே உச்சம் தொட்ட ஜெய்ஸ்வால்.. கோலி முன்னேற்றம்
“அவர் முழுமையான பேக்கேஜ் போல இருக்கிறார்” என்று கூறினார். அந்த வகையில் முதல் போட்டியில் அபாரமாக பந்து வீசிய பும்ரா ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக முன்னேறி சாதனை படைத்துள்ளார். இதை அடுத்து இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி தயாராகி வருகிறது.