
சண்டிகர் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் பெற்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக பிரியான்ஷ் ஆர்யா 103 ரன்கள் குவித்து அசத்தினார்.
அதனை தொடர்ந்து 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இறுதிவரை போராடியும் 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக பஞ்சாப் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அசத்தியது.
இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் சி.எஸ்.கே அணி இந்த தொடரில் தங்களது நான்காவது தோல்வியை பதிவு செய்தது. அதுமட்டும் இன்றி இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் தற்போது ஒன்பதாவது இடத்திற்கும் சென்றுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் பேட்டிங்கின் போது 2 பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்ததாலும், பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 2 ஓவர்களை வீசி 11 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
இந்நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிரான இந்த போட்டியில் விளையாடிய பஞ்சாப் வீரரான கிளென் மேக்ஸ்வெல்க்கு பிசிசிஐ போட்டி கட்டணத்திலிருந்து 25% அபராதமும் ஒரு டிமெரிட் புள்ளியையும் வழங்கி உள்ளது. அதற்கு காரணம் யாதெனில் : போட்டி நடைபெறும் போது மைதானத்தில் உள்ள உபகரணங்களையோ, ஆடைகளையோ அல்லது எவ்வித பொருட்களையோ சேதப்படுத்தினால் அது ஐ.பி.எல் ஆர்ட்டிக்கல் 2.2 விதிமுறைப்படி தவறாகும்.
இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் முதல் பவுலராக மோசமான சாதனைக்கு ஆளான ஷர்துல் தாகூர் – விவரம் இதோ
அந்தவகையில் நேற்றைய போட்டியில் மைதானத்தில் இருந்த உபகரணங்களை சேதப்படுத்தியதாக கூறி மேக்ஸ்வெல் மீது அம்பயர் புகார் கொடுத்ததாகவும், அந்த புகாரை மேக்ஸ்வெல் ஒப்புக்கொண்டதால் அவருக்கு போட்டி ஊதியத்திலிருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு ஒரு டி மெரிட் புள்ளியையும் பி.சி.சி.ஐ வழங்கியுள்ளது. மேலும் 3 டி மெரிட் புள்ளிகளை அவர் இந்த தொடரில் பெறும் பட்சத்தில் ஒரு போட்டியில் விளையாட தடை செய்யப்படவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.