இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது இம்மாத இறுதியில் சவுதி அரேபியாவில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளும் தாங்கள் தக்க வைக்க விரும்பிய வீரர்களின் பட்டியலை அதிகாரவபூர்வமாக அறிவித்து விட்டன. அந்த வகையில் இதுவரை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாத அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஆர்.சி.பி அணி இம்முறை 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்துவிட்டு மற்ற அனைவரையும் வெளியேற்றியது.
என்னை மரியாதையாக வழிநடத்தினார்கள் :
அந்த வகையில் பெங்களூரு அணி சார்பாக விராட் கோலி, ரஜத் பட்டிதார் மற்றும் யாஷ் தயாள் ஆகிய மூவர் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை தவிர்த்து வேறு எந்த வீரரும் அந்த அணியால் தக்கவைக்கப்படவில்லை. இதன் காரணமாக 83 கோடி என்கிற மிகப்பெரிய தொகையுடன் ஆர்சிபி அணி மெகா ஏலத்திற்கு செல்ல காத்திருக்கிறது.
இந்நிலையில் பெங்களூரு அணிக்காக தக்கவைக்கப்படுவார் என்று நம்பப்பட்ட அதிரடி ஆட்டக்காரரான கிளன் மேக்ஸ்வெல் அந்த அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பெங்களூரு அணி தன்னை ரீடெயின் செய்யாதது குறித்து பேசியுள்ள கிளன் மேக்ஸ்வெல் கூறுகையில் : நான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆர்.சி.பி அணியின் நிர்வாகத்தினரிடமும், ஆன்டி பிளவரிடமும் ஒரு பிரத்தேக அழைப்பில் பேசியிருந்தேன்.
அப்போது அவர்கள் என்னை ஏன் அணியில் தக்க வைக்கவில்லை? என்பது குறித்த தெளிவான விளக்கத்தை என்னிடம் அளித்திருந்தார்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அந்த சந்திப்பு மிகச் சிறப்பாக இருந்தது. என்னை அவர்கள் தக்க வைக்காததற்கு சரியான காரணமும் சொல்லி எனக்கு புரிய வைத்திருந்தார்கள். அவர்களுடைய விளக்கம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்திருந்தது.
ஏனெனில் ஒரு வெளிநாட்டு வீரரான என்னை மதித்து எனக்கு மரியாதை அளித்து அவர்கள் என்னை அழைத்துப் பேசியது சிறப்பான ஒரு நடைமுறையாக இருந்தது. அதேபோன்று ஆர்.சி.பி அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டே இந்த முடிவுகள் எல்லாம் எடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய மூன்று வீரர்களை வைத்து ஆர்சிபி அணி கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நியூசிலாந்து அணிக்கெதிரான சொதப்பல்.. 10 ஆண்டுகளுக்கு பிறகு மோசமான சரிவை சந்தித்த – விராட் கோலி
அவர்களுடனான பயணம் எனக்கு இன்னும் முடியவில்லை. நிச்சயம் ஆர்.சி.பி அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்ற ஆசை என்னிடம் இருக்கிறது. அணிக்கு தேவைப்பட்டால் நிச்சயம் அவர்கள் என்னை ஏலத்தில் எடுப்பார்கள். ஆர்சிபி அணியுடன் இருந்த நாட்களை மறக்க முடியாது என கிளன் மேக்ஸ்வெல் கூறியது குறிப்பிடத்தக்கது.