
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக துவங்கியது. வரலாற்றில் 15வது முறையாக நடைபெறும் இந்த தொடரின் கோப்பையை வெல்வதற்கு ஆசியாவின் டாப் 6 அணிகள் பங்கேற்கும் நிலையில் இதர அணிகளை காட்டிலும் வலுவாகவும் பரம எதிரிகளாகவும் கருதப்படும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிக்கு தான் உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த வருடம் இதே துபாயில் இவ்விரு அணிகளும் மோதிய போது உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் புதிய சரித்திரத்தை எழுதியது.
எனவே காலத்துக்கும் மறக்க முடியாத தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையில் இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. பரபரப்பாக நடைபெறப்போகும் இந்த போட்டிக்காக இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் துபாயில் கடந்த சில தினங்களாகவே தீவிரமான வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்துள்ள இவ்விரு நாடுகளும் இது போன்ற ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டுமே மோதுகின்றன. அதனால் இரு அணி வீரர்களும் வலை பயிற்சிக்கு செல்லும் போதும் திரும்பும் போதும் சுமார் ஒரு வருடம் கழித்து நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதால் பரம எதிரிகள் என்பதையும் மறந்து கிரிக்கெட் வீரர்களாக நட்பு பாராட்டி வருகிறார்கள்.
நெகிழும் ரசிகர்கள்:
அந்த வரிசையில் கடந்த வருடம் தோல்வி பெறுவதற்கு காரணமாக இருந்தவர் என்பதையும் மறந்த இந்திய வீரர்கள் முழங்கால் காயத்தால் தவிக்கும் நட்சத்திர பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடியிடம் மனம் விட்டு பேசி நலம் விசாரித்தார்கள். குறிப்பாக யுஸ்வென்ற சஹால், கேஎல் ராகுல், விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அவரிடம் அன்போடு நலம் விசாரித்தனர்.
அந்த நிகழ்வு பாகிஸ்தான் ரசிகர்களின் நெஞ்சை தொட்ட நிலையில் அந்த சந்திப்பின் போது நீங்கள் பார்முக்கு திரும்ப பிரார்த்தனை செய்வதாக விராட் கோலியிடம் ஷாஹீன் அப்ரிடி தெரிவித்தது இந்திய ரசிகர்களின் நெஞ்சை தொட்டது. அத்துடன் விராட் கோலி பார்முக்கு திரும்ப வேண்டும் என்று நாங்கள் அனைவருமே கடவுளைப் பிரார்த்தனை செய்வதாக மற்றொரு வீரர் சடாப் கான் கூறியதும் பாராட்டுக்களை பெற்றது.
கலகலத்த ரோஹித்:
அந்த நிலைமையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை நேற்றைய பயிற்சியின் முடிவில் சந்தித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா நீண்ட நேரம் உரையாடிய வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே கலகலப்பான குணத்தை கொண்ட ரோகித் சர்மா 27 வயது நிரம்பிய பாபர் அசாமிடம் எடுத்த எடுப்பிலேயே “பாய், கல்யாணம் பண்ணிக்கோங்க” என உரையாடலைத் துவங்கினார். அதற்கு சிரித்துக்கொண்டே “இல்லை இல்லை, இப்போது கிடையாது” என்று பாபர் பதிலளித்தார்.
அதேபோல் துபாய் மைதானத்தில் பயிற்சி எடுத்து வரும் இந்திய வீரர்களிடம் பாகிஸ்தான் வீரர்களுக்கு நிகராக அந்நாட்டு ரசிகர்கள் அன்பையும் ஆதரவையும் தெரிவித்து வருவதும் அதற்கு விராட் கோலி போன்றவர்கள் பதிலுக்கு அன்பை காட்டுவதும் கடந்த சில தினங்களாக அரங்கேறி வருகிறது. அந்த வகையில் நேற்று வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரோகித் சர்மாவை பார்க்க குறிப்பிட்ட சில பாகிஸ்தான் ரசிகர்கள் நீண்ட நேரமாக காத்திருந்தனர்.
ரசிகர்களிடம் அன்பு:
அதிலும் குறிப்பாக ஒரு ரசிகர் ரோகித் பாய் உங்களை கட்டி பிடிக்க வேண்டும் என்று உரிமையுடன் கிட்டத்தட்ட அரை மணி நேரம் சத்தமாக கோரிக்கை வைத்து கொண்டே இருந்தார். அத்துடன் இம்முறை ஷாஹீன் அப்ரிடி இல்லாததால் தங்களது அணியை சற்று பொறுமையாக அடிக்குமாறு அந்த ரசிகர் தொடர்ந்து கலகலப்பாக பேசிக்கொண்டே இருந்தார். அவரின் அன்பில் நெகிழ்ந்த ரோகித் சர்மா இறுதியாக தடுப்பு வேலிக்கு அந்தப்புரம் இருந்த அந்த ரசிகரின் அருகே சென்று கையை பிடித்து கட்டிப்பிடிக்கும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அதேபோல் உங்களது கையொப்பமிட்ட ஜெர்சியை பரிசளிக்குமாறு சில பாகிஸ்தான் ரசிகர்கள் பயிற்சி முடிந்து சென்ற ரோகித் ஷர்மாவிடம் கேட்டனர். அதற்கு இந்த தொடரில் இந்தியா வென்ற பின் நிச்சயமாக உங்களுக்கு ஜெர்சியை பரிசளிக்கிறேன் என்று ரோகித் சர்மா வாக்குறுதி கொடுத்துள்ளார். இந்த வீடியோக்கள் அனைத்தும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.