இந்திய கிரிக்கெட் அணி மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை போராடி டிரா செய்து அசத்தியது. அந்தப் போட்டியில் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய இந்தியா 0/2 என சரிந்ததால் இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது ராகுல் 90, கேப்டன் கில் 103 ரன்கள் அடித்து இந்தியாவை தூக்கி நிறுத்தினர்.
அதே போல ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்துக்கு தொல்லையாக மாறி இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றி முன்னிலைப்படுத்தினார்கள். அப்போது இனிமேலும் இந்தியாவை வீழ்த்த முடியாது என்ற உணர்ந்த இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் அவர்களுடைய சதத்தை தடுக்கும் நோக்கத்தில் போட்டியை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். இருப்பினும் கேப்டன் கில் அதை ஏற்காததைத் தொடர்ந்து விளையாடிய ஜடேஜாவும் சுந்தரும் சதத்தை அடித்த பின் இந்தியா போட்டியை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.
ஓவலில் எதிரொலிக்கும்:
ஆனால் அதைப் பார்த்த இங்கிலாந்தினர் கிரிக்கெட்டை நேர்மையாக விளையாடாமல் இந்தியா சொந்த சாதனைக்காக விளையாடியதாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்து கை கொடுத்ததும் அதை இந்தியர்கள் ஏற்றுக்கொண்டு ஏன் நல்லவர்களாக இருக்க வேண்டுமென? அந்நாட்டின் முன்னாள் கேப்டன் ஜெஃப்ரி பாய்காட் கேள்வி எழுப்பியுள்ளார்.
இங்கிலாந்தின் அந்த செய்கை ஓவலில் நடைபெறும் கடைசிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான தன்னம்பிக்கையை இந்தியாவுக்கு கொடுத்துள்ளதாகவும் அவர் தங்களுடைய அணியை சாடியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எது நடக்குமோ அது நடக்கத்தான் செய்கிறது. இங்கிலாந்துக்கு அது பொருத்தமான போது மோசமாக இருந்தது. இந்தியா தொடர்ந்து விளையாடியதற்காகவும், 2 பேட்ஸ்மேன்கள் சதங்களை அடிக்க அனுமதித்ததற்காகவும் நீங்கள் குறை சொல்ல முடியாது”
பாய்காட் சாடல்:
“இங்கிலாந்து அடித்ததைப் போல, இந்தியா திருப்பி அடித்தால் நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு ஸ்டம்ப் மைக்கில் இந்தியாவை நோக்கி அவர்கள் பேசியதை நானும் கேட்டேன். இந்தியா ஏன் இங்கிலாந்திடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்? இங்கிலாந்து போதுமென்று சொன்னதும் அவர்கள் ஏன் ஒப்புக்கொண்டு வெளியேற வேண்டும்? இந்த இந்திய வீரர்கள் கடினமானவர்கள். பின்வாங்கக் கூடியவர்கள் அல்ல”
இதையும் படிங்க: அதுக்காக விளையாடிய இந்தியா ஜென்டில்மேனா நடந்துக்கல.. வேகம் காட்டாதது அவங்க தப்பு.. டேல் ஸ்டைன் கருத்து
“பந்தை நன்றாக விட்டு முழு முகத்தையும் பயன்படுத்தி விளையாடிய ஜடேஜா, சுந்தர் சதங்களுக்கு தகுதியானவர்கள். எதையாவது செய்து தங்களுடைய விக்கெட்டை பாதுகாத்தார்கள். வெல்டன். இப்போதெல்லாம் இப்படி வாய்விட்டு பேசும் அளவுக்கு இங்கிலாந்து வீரர்களின் நிலை என்ன? என்று எனக்குத் தெரியவில்லை. எங்களுடைய காலத்தில் உண்மையில் இப்படி நடந்ததில்லை. இது ஓவலிலும் தொடரும். இந்தியா மான்செஸ்டரில் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொண்டு அங்கே செல்வார்கள்” எனக் கூறினார்.



