ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாட உள்ள வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை 2024-25 வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2018-19, 2020-21 தொடர்களை அடுத்தடுத்து இந்திய கிரிக்கெட் அணி வென்றது. எனவே இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்க உள்ள இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இருப்பினும் இம்முறை கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவை 3 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வீழ்த்தும் என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கணித்துள்ளார். அதே போல போட்டி மிகுந்த அந்தத் தொடரில் இம்முறை இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா வெல்லும் என்று ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
டிராவுக்கு வாய்ப்பில்லை:
இந்நிலையில் தங்கள் நாட்டில் வெயில் காலத்தில் நடைபெற உள்ள அந்தத் தொடரில் எந்த போட்டியும் டிராவில் முடிவடைய வாய்ப்பில்லை என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜெஃப் லாசன் கூறியுள்ளார். அத்துடன் இம்முறை 3 – 2 என்ற கணக்கில் இந்தியாவை தங்களது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்று அவர் அதிரடியான கணிப்பையும் வெளியிட்டுள்ளார். இது பற்றி மிட்-டே பத்திரிகையில் அவர் கூறியது பின்வருமாறு.
“அனைத்து விஷயங்களிலும் இந்தியா – ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளுமே பொருத்தமாக இருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் சமீபத்திய தொடர்களில் வெற்றி பெற்ற அனுபவங்களை மனதளவில் நினைத்தால் இந்தியா அழுத்தத்திற்குள் தள்ளப்படுவார்கள். இந்தத் தொடரின் வெற்றியாளர் எப்படி வரவேண்டும் என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் விரும்புவது போலவே நான் நிச்சயமற்ற முறையில் 3 – 2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என்று நம்புகிறேன்”
ஆஸ்திரேலியா வெல்லும்:
“இம்முறை ஆஸ்திரேலியாவில் வெப்பமான கோடைகாலம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே தரமான 2 அணிகள் மோதும் இத்தொடரில் ட்ரா நிகழ்வதை நான் பார்க்கப் போவதில்லை. ஒன்று பேட்ஸ்மேன்கள் வேகமாக ரன்கள் அடிப்பார்கள். இல்லையேல் பேட்டிங்கில் வேகமான சரிவுகள் ஏற்படலாம். இந்த தொடர் 21ஆம் நூற்றாண்டின் சிறந்த தொடராக இருக்கலாம்”
இதையும் படிங்க: ரவிச்சந்திரன் அஷ்வின் முதலிடம்.. மேலும் 2 இந்திய வீரர்களுக்கு இடம் – ஐ.சி.சி வெளியிட்டுள்ள புதிய ரேங்கிங்
“அது டெஸ்ட் கிரிக்கெட்டின் பிரீமியம் வடிவம் என்ன என்பதை நமக்கு நினைவூட்டலாம்” என்று கூறினார். முன்னதாக 2020-21 தொடரில் 4 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என்று மைக்கேல் வாகன், மைக்கேல் கிளார்க் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் கணித்தனர். இறுதியில் அவற்றை பொய்யாக்கி இந்தியா கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதே போல இம்முறையும் இந்தியா வெல்ல வேண்டும் என்பதே இங்குள்ள ரசிகர்களின் விருப்பமாகும்.



