அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்? என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதே வேளையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறும் பெரும்பாலான வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பிடிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
துவக்க வீரராக அவரை களமிறக்குங்கள் :
அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரே துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று தெரிகிறது. ஆனால் இந்திய அணியின் துவக்க வீரர்களில் மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் என முன்னாள் வீரரான கவாஸ்கர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஒருவேளை செலக்டர்ஸ் புதிய துவக்க வீரரை நியமிக்க நினைத்தால் என்னை பொறுத்தவரை ஜெய்ஸ்வாலை சுப்மன் கில்லுக்கு பதிலாக ரோகித் சர்மாவுடன் களம் இறக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் எப்பொழுதுமே ஓப்பனர்களாக வலதுகை, இடது கை வீரர்கள் இருப்பது அணிக்கு கூடுதல் சாதகத்தை தரும்.
அந்த வகையில் இதுவரை இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அந்த இடத்திற்கு பொருத்தமானவர் என்று நினைக்கிறேன். ஏனெனில் நடைபெற்ற முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட அவரது மிகச்சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிக்காட்டிருந்தார். அதேவேளையில் சுப்மன் கில் தனது பார்மில் தடுமாற்றத்தை கண்டிருந்தார்.
இதன் காரணமாக கில்லுக்கு பதிலாக ஜெய்ஸ்வாலை துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று தான் கருதுவதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியது போலவே இதுவரை இந்திய அணிக்காக 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் 52 ரன்கள் சராசரியுடன் 1798 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். அதேபோன்று உள்ளூர் போட்டியிலும் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இதையும் படிங்க : உண்மையிலே இதுமட்டும் நடந்தா எனக்கு பெருமை தான்.. இந்திய அணிக்கு திரும்புவது குறித்து – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி
ஆனால் சுப்மன் கில்லை பொறுத்தவரை டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் அவர் தடுமாற்றத்தை சந்தித்திருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் இதுவரை 47 போட்டிகளில் விளையாடி 58 ரன்கள் சராசரியுடன் 6 சதம் மற்றும் 13 அரைசதம் என 2328 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



