- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கோலி பேட்டிங்கில் செய்யும் தவறு இதுமட்டும் தான். இதை சரிசெய்தாலே போதும் – கவாஸ்கர் அறிவுரை

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ரன் குவிக்க சற்று சிரமப்பட்டு வருகிறார். வழக்கமாக சதங்களை விளாசும் கோலி 2 ஆண்டுகளாக சதம் அடிக்காமல் விளையாடி வருவது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அவர் மீண்டும் சிறப்பான பார்மிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இவ்வேளையில் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் கோலியிடமிருந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது. தற்போது நடைபெற்றுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் 5 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள விராட் கோலி 124 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கடைசியாக நடைபெற்ற லீட்ஸ் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் 55 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதனால் கோலியின் பேட்டிங் மீதான விமர்சனங்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் கோலியின் பேட்டிங் சறுக்கல் குறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர் கூறுகையில் : கோலி தன்னுடைய ஷாட்களை தேர்வு செய்வதில் தவறு செய்து வருகிறார். மிகவும் எளிமையாக விளையாடி இருக்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 8000 ரன்களை அடித்துள்ளார்.

அதில் 6500 ரன்களை கிரீஸுக்கு வெளியே நின்று அடித்துள்ளார். அதனால் அவர் பேட்டிங்கில் பெரிதாக மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கோலியின் ஷாட் தேர்வில் தான் பிரச்சனை உள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : எந்த பந்தை அடிக்க வேண்டும், எந்த பந்தை விட வேண்டும் என்பதில் இன்னும் அவர் அதிக கவனம் செலுத்தியாக வேண்டும்.

புஜாரா தனது இன்னிங்சில் அதை சரியாக செய்து விட்டார். ஆனால் கோலி அவுட்டான பந்துகள் எல்லாம் ஒரே போன்ற ஒரே மாதிரியான பந்துகள் தான். இதனை அவர் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். நான்காவது ஸ்டம்பில் பந்து வந்தால் விளையாடலாம் ஆனால் ஐந்தாவது, ஆறாவது ஸ்டம்புக்கு வரும் பந்துகளை அடிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் கோலிக்கு அவருக்கு அறிவுரை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by