நடப்பு உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12-சுற்றோடு வெளியேறிய இந்திய அணியானது அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டி20 தொடரானது வரும் நவம்பர் 17ம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த இந்திய அணியில் சீனியர் வீரர்களான விராட்கோலி, பும்ரா, ஷமி போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வர இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் இந்த தொடரின் இந்திய அணி தேர்வு குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதுகுறித்து அவர் கூறுகையில் : நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த டி20 தொடருக்கான அணி வீரர்களின் தேர்வு சிறப்பாக இருக்கிறது. இது போன்ற தொடர்களில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது என்பது ஒரு சரியான முடிவு.
குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட் சமீப காலமாகவே சிறப்பாக விளையாடி வருகிறார். அவரது ஷாட் செலக்சன் மற்றும் டைமிங் என அனைத்தும் அற்புதமாக இருக்கிறது. பல்வேறு விதமான ஷாட்டுகளை தன்வசம் வைத்துள்ள கெய்க்வாட் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாட தகுதியான வீரர். அந்த திறமை நிச்சயம் அவரிடம் உள்ளது என்று சுனில் கவாஸ்கர் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :
இதையும் படிங்க : இந்தியா பாகிஸ்தான் தொடர் நடக்கணுனா இதுமட்டும் தான் ஒரேவழி – ஐ.சி.சி நிர்வாகி தகவல்
போட்டியின் போது எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமையும் அவரிடம் உள்ளது. நிச்சயம் விரைவில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரராக மாறும் வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 635 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையுடன் ஆரஞ்சு கேப்பை கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.