
இந்திய அணியின் இளம் முன்னணி ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா கடந்த சில ஆண்டுகளாகவே பந்து வீச முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். அதோடு இந்திய அணியில் விளையாடி வந்த இடத்தை இழந்த அவர் மீண்டும் முழு உடற்தகுதியுடன் அணியில் திரும்பும்வரை தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என்று இந்திய அணியின் தேர்வாளர்களை கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் தொடரின் 15-வது சீசனில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹார்திக் பாண்டியா அறிமுக தொடரிலேயே அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் அணியாக மாற்றி அசத்தியுள்ளார்.
இந்த தொடரில் ஒரு கேப்டனாக ஹார்திக் குஜராத் அணியை அவர் வழி நடத்திய விதம் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு சென்றது மட்டுமின்றி இறுதிப் போட்டியிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றது வரை இந்த தொடரில் குஜராத் பெற்ற வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் ஹார்திக் பாண்டியா என்றால் அது மிகை அல்ல.
அதிலும் குறிப்பாக இறுதிப் போட்டியில் பேட்டிங், பௌலிங், பீல்டிங் என அனைத்திலும் பாண்டியா அசத்தியிருந்தார். இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான கம்பேக் கொடுத்திருந்த அவர் பேட்டிங்கில் 487 ரன்களும், பவுலிங்கில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். அதேபோன்று கேப்டனுக்கே உரித்தான பாணியில் அவரது செயல்பாடு மிகவும் அற்புதமாக இருந்தது. இதன் காரணமாக பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பாண்டியா குறித்து பேசுகையில் கூறியதாவது :
டி20 உலகக் கோப்பைக்கு முன்னர் ஹார்திக் பார்முக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலுமே தற்போது பட்டையை கிளப்பி தனது இடத்தை உறுதி செய்துள்ளார். அதோடு பந்துவீச்சிலும் 140 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் தொடர்ச்சியாக வீசி வருவதால் அவர் நல்ல உடற் தகுதியை அடைந்து விட்டார் என்று நினைக்கிறேன். அதோடு அவரது பேட்டிங்கும் சிறப்பாக இருக்கிறது.
பாண்டியா கொடுத்த இந்த கம்பக் நிச்சயம் தேர்வுக்குழுவிற்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு விடயமாக இருக்கும். மேலும் ஒரு பேட்ஸ்மேனாக ஹர்டிக் பாண்டியாவின் ஷாட் செலக்சன் மிக அற்புதமாக இருக்கிறது. எல்லா பந்துகளையும் பெரிய சிக்ஸராக அடிக்க முயன்று நிறைய வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர். ஆனால் அவர்களை போல் எல்லாம் இல்லாமல் தேவையான பந்துகளை சரியான நேரத்தில் பெரிய ஷாட் அடிக்கிறார்.
இதையும் படிங்க : பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் நிறைந்த ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக டாட் பந்துகளை வீசிய டாப் 5 பவுலர்கள்
இக்கட்டான வேளையில் பெரிய ஷாட் அடிக்கும் போது அதை அவர் சரியாக கையாண்டுள்ளார். ரோகித் சர்மாவை போலவே புத்திசாலித்தனமாக அவர் ஷாட்டுகளை தேர்வு செய்துள்ளார். அதனால்தான் கேப்டன் பதவி ஏற்றதும் அவரால் பெரிய ரன்கள் அடிக்க முடிகிறது என்றும் கவாஸ்கர் பாண்டியவை புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.