ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தோனி வழக்கம் போலவே முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 216 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 74 ரன்களில் (9 சிக்ஸர் 1 பவுண்டரி) , ஸ்டீவ் ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்களும் (4 சிக்ஸர் 4 பவுண்டரி) குவித்தனர். அதற்கடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் டூபிளெஸ்ஸிஸ் தவிர மற்ற யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.
37 பந்துகளை சந்தித்த டூபிளெஸ்ஸிஸ் 7 சிக்சர் ஒரு பவுண்டரி என 72 ரன்கள் குவித்தார். துவக்க வீரர் வாட்சன் 33 ரன்களும், இறுதி நேரத்தில் அதிரடியாக 3 சிக்சர்களை விளாசிய தோனி 29 ரன்களும் குவித்தனர். இதனால் சென்னை அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று இந்த போட்டி முடிந்த பின்னர் இந்த போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் தனது கருத்தினை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சஞ்சு சாம்சன் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மட்டுமல்ல திறமை வாய்ந்த இளம் பேட்ஸ்மேன் என்று தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
Sanju Samson is not just the best wicketkeeper batsmen in India but the best young batsman in India!
Anyone up for debate?— Gautam Gambhir (@GautamGambhir) September 22, 2020
மேலும் அவரின் இந்த கருத்திற்கு ரசிகர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருவது மட்டுமின்றி நிச்சயம் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் விரைவில் நிரந்தர இடம் பிடிப்பார் என்றும் தனது கருத்துகளை அளித்து வருகின்றனர்.