இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி இன்று மே 12-ஆம் தேதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏனெனில் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக அவர் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்த கவுதம் கம்பீர் :
தற்போது 36 வயதாகும் விராட் கோலி இன்னும் இரண்டு ஆண்டுகள் அடுத்த 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வரை விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அவரது இந்த ஓய்வு அறிவிப்பு அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
எனவே இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடுவார். இந்நிலையில் விராட் கோலி ஓய்வு பெற்றதை அடுத்து அவருக்கு தொடர்ச்சியாக பல்வேறு நட்சத்திரங்களிடம் இருந்தும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீரும் அவரை பாராட்டி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கௌதம் கம்பீர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : சிங்கத்தைப் போன்ற ஆர்வம் உடைய மனிதர் நீங்கள். உங்களை மிஸ் செய்வேன் சீக்கு என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்த பின்னரே ஆஸ்திரேலியா தொடரின் போது தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வினை அறிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்து சில தினங்களுக்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். தற்போது அவரை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வை அறிவித்துள்ளார். இப்படி சீனியர் வீரர்கள் அனைவரும் தொடர்ச்சியாக ஓய்வினை அறிவிப்பதற்கு கௌதம் கம்பீரே காரணம் என்று பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : 2013இல் கொடுத்த அப்பாவின் கயிறை மறக்க முடியாது.. ஓய்வு பெற்ற கிங் கோலியை.. வாழ்த்திய ஜாம்பவான் சச்சின்
இவ்வேளையில் விராட் கோலியின் ஓய்விற்கும் அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளதால் அவரது இடத்திற்கு ஷ்ரேயாஸ் ஐயர் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



