
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர கேப்டன் எம்எஸ் தோனி ஜூலை ஏழாம் தேதி தன்னுடைய 43வது பிறந்த நாளை கொண்டாடினார். கடந்த 2004ஆம் ஆண்டு அறிமுகமாகி கங்குலியின் ஆதரவுடன் குறுகிய காலத்திலேயே அதிரடியாக விளையாடிய அவர் நிலையான இடத்தை பிடித்தார். குறிப்பாக இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்ற தற்போதைய நிலைமை உருவாவதற்கு தோனி முக்கிய காரணமாக இருந்தார்.
அதை விட அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பொறுப்பில் 2007 டி20 உலகக் கோப்பையை வென்று காட்டிய அவருடைய தலைமையில் 2010ஆம் ஆண்டு இந்தியா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேறி சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து 28 வருடங்கள் கழித்து 2011 உலகக் கோப்பை இந்தியாவுக்கு கேப்டனாக வென்று காட்டிய தோனி 2013 சாம்பியன்ஸ் டிராபியையும் முத்தமிட்டார்.
வாழ்த்திய கம்பீர்:
அதனால் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் ஐபிஎல் தொடரிலும் 5 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். அத்துடன் மகத்தான ஃபினிஷராகவும் போற்றப்படும் அவர் சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, ரோஹித், அஸ்வின் போன்ற நட்சத்திரங்கள் உருவாவதற்கும் முக்கிய காரணமாக இருந்தார்.
அதனால் ஜூலை ஏழாம் தேதி அவருக்கு ஏராளமான முன்னாள் இந்நாள் வீரர்களும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வரிசையில் இணைந்த கௌதம் கம்பீர் 3 ஐசிசி கோப்பைகளை வென்று சாதனை படைத்த தோனி போன்ற ஒரு கேப்டன் எப்போதும் இந்தியாவுக்கு கிடைக்க மாட்டார் என்று பாராட்டினார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.
“நிறைய கேப்டன்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் இந்திய அணியில் எம்எஸ் தோனியின் சாதனையை பொருத்துவது மிகவும் கடினம். நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து வெளிநாட்டில் வெல்லலாம். ஆனால் 2 ஐசிசி உலகக் கோப்பை மற்றும் ஒரு சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதை விட மிகப்பெரிய சாதனை இருக்க முடியாது. நாங்கள் மிகப்பெரிய தருணங்களை பகிர்ந்து கொண்டோம்”
இதையும் படிங்க: டிஎன்பிஎல் 2024 : வெறும் 1 ரன் த்ரில்லர்.. ஷாருக்கான் மேஜிக்.. கடைசி பந்தில் திருப்பூரின் வெற்றியை பறித்த கோவை
“டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு தொடர், நியூசிலாந்தில் வென்ற டெஸ்ட் தொடர், தென்னாபிரிக்க மண்ணில் சமன் செய்த டெஸ்ட் தொடர், ஆசிய கோப்பை வென்றது போன்ற பெரிய தருணங்களில் நான் அவருடன் இருந்தேன். இன்னும் சில தருணங்கள என்னால் குறிப்பிட முடியவில்லை. அவர் இந்தியாவுக்காக விளையாடிய சிறந்த கேப்டன்” என்று கூறினார்.