இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் மட்டுமே தோல்வியை சந்தித்த வேளையில் மற்ற 4 போட்டிகளில் வெற்றி பெற்று இந்த டி20 தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
ஒருநாள் போட்டிகளிலும் இப்படித்தான் ஆடுவோம் :
இந்திய அணி பெற்ற இந்த வெற்றி அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்நிலையில் எதிர்வரும் இந்த ஒருநாள் தொடருக்கான போட்டிகளிலும் இந்திய அணி வீரர்கள் எவ்வாறு செயல்படுவார்கள்? என்பது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 போட்டியில் நாங்கள் தோற்பதை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. ஏனெனில் முதலில் பேட்டிங் செய்யும்போது 250 முதல் 260 ரன்கள் வரை குவிக்க வேண்டும் என்று நினைத்தோம். இப்படி டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடும் போது ஒரு சில சமயங்களில் 120 ரன்களில் கூட ஆட்டமிழக்க நேரிடும்.
ஆனால் அதைப் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்பட மாட்டோம். எங்களது வீரர்கள் அதிரடியாக விளையாட வேண்டும் என்பது மட்டுமே எங்களது இலக்காக இருந்தது. அந்த வகையில் இந்த தொடர் முழுவதுமே பயமின்றி மிகச் சிறப்பான ஆட்டத்தை நமது வீரர்கள் வெளிப்படுத்தினர்.
அபிஷேக் சர்மா போன்று இப்படி 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வரும் பந்துகளை அடித்து ஒரு சதத்தை பதிவு செய்து நான் இதுவரை யாரையும் பார்க்கவில்லை. அந்தவகையில் இனியும் இந்த ஆட்டம் தொடரும். அதேபோன்று ஒருநாள் போட்டிகளிலும் நமது அணியின் வீரர்கள் அதிரடியாக விளையாடுவார்கள் என்ற திட்டம் இருக்கிறது.
இதையும் படிங்க : ஈகோவுடன் விளையாடும் சாம்சன் இதை செய்யலன்னா ஜெய்ஸ்வால் வரலாம்.. சூரியகுமாருக்கும் ஸ்ரீகாந்த் அறிவுரை
அதோடு டாப் ஆர்டரில் துவக்க வீரர்கள் தவிர மற்ற அனைத்து வீரர்களும் பேட்டிங் செய்வது மட்டுமின்றி பந்து வீசவும் முயற்சிப்பார்கள், மேலும் பேட்டிங் வரிசையிலும் தேவைப்படும் போது மாற்றங்கள் இருந்துகொண்டே இருக்கும் என பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.