இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்து அசத்திய இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரரும், துணை கேப்டனுமான சுப்மன் கில் மூன்றாவது போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 356 ரன்கள் குவித்தது.
சுப்மன் கில்லை விமர்சனம் செய்ய வேண்டாம் : கவுதம் கம்பீர் ஆதரவு
அதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 102 பந்துகளை சந்தித்து 14 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 112 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதோடு சேர்த்து தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது. ஏனெனில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் அரைசதம் அடித்த அவர் நேற்று சதம் அடித்து அசத்தியிருந்தார்.
அவரது இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள வேளையில் இந்த தொடருக்கு முன்னதாக அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட போது அவரின் மீது கடுமையான விமர்சனங்கள் இருந்தன. ஏனெனில் ஹர்திக் பாண்டியாவே துணை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற பேச்சு பலரது மத்தியிலும் இருக்க சுப்மன் கில் புதிய துணை கேப்டனாக கொண்டுவரப்பட்டது விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியதாவது : நம்முடைய வீரர்களை ஒவ்வொரு இன்னிங்ஸின் முடிவிலும் நாம் மதிப்பிடுவது தான் இங்கு பிரச்சனையாக இருக்கிறது. சுப்மன் கில் மிகவும் இளமையான வீரர். தற்போது அவருக்கு 25 வயது தான் ஆகிறது. எனவே அவருக்கு நாம் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். ஓய்வறையில் அவருக்கு நாம் நம்பிக்கை கொடுத்தால் நிச்சயம் அவர் இனிவரும் காலங்களிலும் இதைவிட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.
ஏற்கனவே கடினமான வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். தற்போது ஒருநாள் அணியிலும் துணை கேப்டனாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு தொடர்ந்து நம்பிக்கை வழங்கும் பட்சத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இன்னும் மிகப்பெரிய வீரராக மாறுவார். அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் நாம் நம்பிக்கையை அளிக்க வேண்டும்.
இதையும் படிங்க : விராட் கோலியை ஆர்.சி.பி அணியின் நிர்வாகம் கேப்டனாக நியமிக்காதது ஏன்? – கோச் கொடுத்த விளக்கம்
அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்திய அணி எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அந்த அளவிற்கு நமது அணி வலுவடைந்திருக்கும் எனவே வெளியில் இருந்து யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம். அவருக்கு ஆதரவளித்தாலே அவர் சிறப்பாக செயல்படுவார். தினமும் ஒவ்வொரு புதிய விடயத்தை கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் இருக்கும் கில் எதிர்காலத்தில் மிகச் சிறப்பாக அணியையும் வழிநடத்துவார் என கம்பீர் ஆதரவு கூறியது குறிப்பிடத்தக்கது.



