ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணி லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியது. சொல்லப்போனால் 7 வருட ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறையாகும். அந்த அணியின் இந்த வெற்றிக்கு கௌதம் கம்பீர் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். இந்த வருடம் லக்னோ அணியிலிருந்து வெளியேறிய அவர் கொல்கத்தா அணியில் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.
ஏற்கனவே 2012, 2014 இந்திய வருடங்களில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக கோப்பையை வென்று கொடுத்த அவர் இம்முறை ஆலோசகராக வந்ததும் சுனில் நரைனை ஓப்பனிங்கில் களமிறக்கிய முடிவு வெற்றிகரமாக அமைந்தது. முன்னதாக இந்தியாவுக்காக ஒன்றாக விளையாடியும் 2013 ஐபிஎல் தொடரில் மோதிக்கொண்ட கௌதம் கம்பீர் – விராட் கோலி ஆகியோர் கடந்த வருடம் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய போட்டியில் சண்டையிட்டு கொண்டனர்.
கோப்பை தரமாட்டாங்க:
அதனால் இம்முறையும் அவர்கள் மோதிக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தண்ணீர் இடைவேளையில் தாமாக சென்ற கம்பீர் களத்தில் இருந்த விராட் கோலிக்கு அரை சதமடித்ததற்காக கை கொடுத்து கட்டிப்பிடித்து பாராட்டி அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் விராட் கோலியை கட்டிப்பிடித்து வாழ்த்தியதற்காக 2024 ஐபிஎல் தொடரின் ஃபேர் பிளே விருது புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா முதலிடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்த்ததாக கம்பீர் கூறியுள்ளார்.
ஆனால் உண்மையில் தற்போது கொல்கத்தா அப்பட்டியலில் 10வது இடத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அஸ்வின் யுடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சின்னசாமி மைதானத்தில் நடந்ததற்குப் பின் உண்மையாக நாங்கள் ஃபேர் பிளே அவார்ட் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருப்போம் என்று நினைத்தேன். ஏனெனில் அதில் எந்த போட்டியும் கிடையாது”
“புள்ளிப்பட்டியலில் எங்கிருந்தாலும் அந்த பட்டியலில் நாங்கள் மேலே இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்போதும் நாங்கள் கீழே இருக்கிறோம். கொல்கத்தா அணி இருக்க வேண்டிய இடத்தில் தற்போது இருப்பதாக சில நாட்களுக்கு முன் ஒருவர் எனக்கு மெசேஜ் செய்தார். அவரிடம் ஆம் என்று சொன்னேன். அதன் பின் ஃபேர் பிளே பட்டியலில் எங்கே இருக்கிறோம் என்று கேட்டார். அதற்கு 10வது இடத்தில் என்று சொன்னேன். அதற்கு கோப்பை கிடைக்குமா என்று அவர் கேட்டார். இல்லை என்று சொன்னேன்”
இதையும் படிங்க: அதுக்காக சாரி மன்னிச்சுடுங்க.. ஆர்சிபி ரசிகர்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்ட ஷேன் வாட்சன்
“இருப்பினும் கடந்த 5 போட்டிகளில் நான் பெவிலியினில் அமர்ந்திருந்ததை தவிர்த்து என்ன தவறாக செய்தேன்? என்பது எனக்கு புரியவில்லை. உண்மையில் நான் எந்த அணிக்காக விளையாடினாலும் அந்த அணி ஃபேர் பிளே பட்டியலில் 9 அல்லது 10வது இடத்தில் இருக்கிறது. கடந்த வருடம் லக்னோ 9வது இடத்தில் இருந்தது. தற்போது கொல்கத்தா 10வது இடத்தில் இருக்கிறது. எனவே அந்த விருதை நீங்கள் வெல்ல வேண்டுமெனில் என்னிடமிருந்து தள்ளியிருங்கள்” என்று கலகலப்பாக கூறினார்.



