50, 100 சதங்கள் அடிச்சும் என்ன புண்ணியம், அவங்களிடம் நாம தோத்துட்டமே – விராட் கோலியை மீண்டும் கம்பீர் விமர்சித்தது என்ன

Gambhir
Advertisement

2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. முன்னதாக கடைசியாக 2011க்குப்பின் சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையை வென்ற இந்தியா இம்முறை மீண்டும் வெல்வதற்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பின் இந்திய பேட்டிங்கின் தூணாக கருதப்படும் விராட் கோலியின் பார்ம் மிகவும் அவசியமாகிறது.

Virat Kohli

ஏனெனில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக 3 வகையான இந்திய அணியிலும் ஏராளமான சதங்களையும் ரன்களையும் விளாசி நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தவித்தார். அதற்காக அணியிலிருந்து நீக்குமாறு முன்னாள் வீரர்களின் கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர் மனம் தளராமல் போராடி 2022 ஆசிய கோப்பையில் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து ஃபார்முக்கு திரும்பி அதே வேகத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

அத்துடன் கடந்த மாதம் வங்கதேசம் மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் சதமடித்து 2022 வருடத்தை வெற்றியுடன் நிறைவு செய்த அவர் 2023இல் இலங்கைக்கு எதிராக களமிறங்கிய முதல் போட்டியிலும் சதமடித்து வெற்றியுடன் துவங்கியுள்ளார். அந்த நிலையில் கொல்கத்தாவில் ஜனவரி 12ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது போட்டியில் ஹாட்ரிக் சதங்களை விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 216 ரன்களை துரத்தும் போது 4 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

Virat Kohli

என்ன புண்ணியம்:
அவரது தடுமாற்றத்தால் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியா ஒரு வழியாக ராகுலின் பொறுப்பான ஆட்டத்தால் வென்றது. அப்படி முக்கியமான அழுத்தமான சூழ்நிலையில் பெரிய ரன்களை குவிக்காமல் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் முதல் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்து தொடரை இழந்த பின் கடைசி போட்டியில் சதமடிப்பது போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்துவதில் என்ன பயன் என்று விராட் கோலியை மீண்டும் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக 50 அல்லது 100 சதங்கள் அடித்தாலும் வெற்றிக்கு உதவாமல் போனால் அது தன்னிச்சையான பெயரில் சேருமே தவிர நாட்டுக்கு உதவாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வியடைந்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஆனால் நாம் அதை மறந்து விட்டோம். ஆம் தன்னிச்சையான வீரர்களின் மிகச் சிறந்த ஆட்டம் முக்கியமானது. அவர்களுடைய சதங்களும் முக்கியமானது. குறிப்பாக 50 சதங்கள் அல்லது 100 சதங்கள் உங்களது பெயரில் சேரும் போது அதை பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருக்கும்”

Gautam-Gambhir-and-Virat-Kohli

“ஆனால் வங்கதேசத்தில் என்ன நடந்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஏனெனில் அது நமக்கு மிகப்பெரிய பாடமாக அமைந்தது. குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முழுமையான பலம் கொண்ட இந்திய அணி தோல்வியை சந்தித்தது. எனவே நாம் அந்தத் தொடரிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர இந்த தொடரில் மட்டும் கவனம் செலுத்தக் கூடாது. குறிப்பாக கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது” என்று கூறினார். அதாவது முக்கியமற்ற போட்டிகளில் சதங்களை அடித்து சாதனை படைப்பதில் எந்த பயனுமில்லை என்று விராட் கோலியை கௌதம் கம்பீர் மறைமுகமாக சாடியுள்ளார்.

இதையும் படிங்க: IND vs SL : இந்திய அணிக்கு எதிரான இந்த தோல்விக்கு காரணமே இதுதான் – இலங்கை கேப்டன் ஷனகா பேட்டி

முன்னதாக அப்போது ஒரு போட்டிக்கு ஒரு பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில் இப்போது ஒரு போட்டிக்கு 2 புதிய பந்துகளுடன் 5 பீல்டர்கள் உள்வட்டத்திற்குள் நிறுத்தப்படுவது போன்ற பேட்டிங்க்கு சாதகமான விதிமுறைகளால் விராட் கோலியின் சதங்களை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட முடியாது என்று கௌதம் கம்பீர் விமர்சித்தது பெரிய புயலை கிளப்பியது. அந்த வரிசையில் மீண்டும் விராட் கோலியை தாக்கும் வகையில் கம்பீர் பேசியுள்ளது அவரது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது.

Advertisement