இந்திய அணியில் ரோஹித் சர்மா கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் புதிய கேப்டனாக வளர்க்கப்பட்டு வருகிறார். அதற்காக ஸ்ரேயாஸ் ஐயர் டி20 மற்றும் சஞ்சு சாம்சன் ஒருநாள் கிரிக்கெட்டில் கழற்றி விடப்பட்டுள்ளார்கள். இது போக ஜெய்ஷ்வால், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது ரசிகர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் டெல்லியைச் சேர்ந்த ஹர்ஷித் ராணாவுக்கு மட்டும் 3 வகையான அணியிலும் வாய்ப்பு கிடைப்பது பல ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. ஏனெனில் 2024 ஐபிஎல் கோப்பையை கௌதம் கம்பீர் வழிகாட்டுதலில் கொல்கத்தா வெல்வதற்கு அவர் முக்கிய பங்காற்றினார். அந்த ஒரே காரணத்துக்காக பயிற்சியாளராக வந்ததும் அவருக்கு கௌதம் கம்பீர் 3 வகையான அணியிலும் வாய்ப்பை கொடுத்துள்ளார்.
23 வயது குழந்தை ராணா:
ஆனால் அந்த வாய்ப்புகளில் இதுவரை ரசிகர்கள் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு ராணா இந்தியாவுக்கு பெரிதாக எந்த வெற்றிகளையும் பெற்றுக் கொடுக்கவில்லை. அதனாலேயே அவருடைய தேர்வை பல ரசிகர்கள் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். குறிப்பாக “ஹர்ஷித் ராணா எதற்காக அணியில் இருக்கிறார்” என்பது யாருக்கும் தெரியவில்லை என்று முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் விமர்சித்தார்.
இப்போதெல்லாம் திறமையைக் காட்டிலும் கௌதம் கம்பீருக்கு ஆமாம் போடும் ராணா போன்ற வீரர்களுக்கே வாய்ப்பு கிடைப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு டெல்லியைச் சேர்ந்த கம்பீர் கொடுத்துள்ள காட்டமான பதிலடி பின்வருமாறு. “இந்த விமர்சனம் கொஞ்சம் வெட்கக்கேடானது என்று உங்களிடம் நேர்மையாக சொல்வேன். உங்களுடைய யூடியூப் சேனலின் நலனுக்காக 23 வயது குழந்தையை டார்கெட் செய்வது நியாயமற்றது”
கம்பீர் பதிலடி:
“ஏனெனில் ராணாவின் தந்தை முன்னாள் தலைவர் அல்லது கிரிக்கெட்டர் அல்லது வெளிநாட்டவர் கிடையாது. இதுவரை அவர் விளையாடியுள்ள கிரிக்கெட் அனைத்தும் தம்முடைய சொந்த வழியில் விளையாடினார். அதை தொடரப்போகும் அவரைப் போன்றவரை குறி வைத்து விமர்சிப்பது நியாயமற்றது. வீரர்களின் செயல்திறன், தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் செயல்பாடுகளை நீங்கள் குறி வைக்கலாம்”
இதையும் படிங்க: வெ.இ அணிக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது இந்தியாவுக்கு பின்னடைவை உண்டாக்கியது ஏன்? கேப்டன் கில் விளக்கம்
“ஆனால் ஒரு 23 வயது குழந்தையை சமூக வலைதளங்களில் அப்படி பேசுவது சரியல்ல. நாளை உங்களுடைய குழந்தையும் அப்படி குறி வைக்கப்படலாம். ராணா ஒன்றும் 33 வயதுடையவர் கிடையாது. நீங்கள் என்னை விமர்சியுங்கள். அதை நான் சமாளிக்கிறேன். ஆனால் 23 வயது பையனை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. நீங்கள் செயல்திறனை மட்டும் விமர்சனம் செய்யுங்கள். தனிப்பட்ட இளம் வீரர்களை விமர்சிக்காதீர்கள். இது அனைத்து இளம் வீரர்களுக்கும் பொருந்தும்” என்று கூறினார்.



