இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்றது. அதனால் கடந்த வாரம் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் படுதோல்வியைப் பரிசளித்த தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய அணி தக்க பதிலடி கொடுத்தது. அதற்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
கடந்த 15 வருடங்களுக்கும் மேல் விளையாடும் அவர்கள் இந்தியாவின் ஏராளமான வெற்றிகளில் பங்காற்றியுள்ளனர். ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்ட அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுகிறார்கள். இங்கிருந்து 2027 உலகக் கோப்பையில் விளையாடி அவர்கள் வெற்றியுடன் விடை பெற திட்டப்பட்டுள்ளனர்.
இப்போவும் உறுதியில்லை:
ஆனால் அதற்கு முன்பாக வயதைக் காரணமாக காட்டி அவர்களை கழற்றிவிட பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு முயற்சித்து வருகிறது. அதற்காக அசராத ரோஹித் சர்மா கடந்த ஆஸ்திரேலியா தொடரில் தொடர்நாயகன் விருது வென்று அவர்களுக்கு பதிலடி கொடுத்தார். தற்போது நடைபெற்ற தென்னாப்பிரிக்கா தொடரில் தொடர்நாயகன் விருது வென்ற விராட் கோலி தம்மைக் கழற்றி விட நினைப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதனால் 2027 உலகக் கோப்பை வாய்ப்பை அவர்கள் கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டனர் என்றே சொல்லலாம். இந்நிலையில் உலகக் கோப்பைக்கு 2 வருடங்கள் இருப்பதால் விராட், ரோஹித்துக்கான இடம் இன்னும் உறுதியாகவில்லை என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். போட்டிக்கு இளம் வீரர்கள் இருப்பதாக இருக்கும் கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
கம்பீர் மறுப்பு:
“முதலில் உலகக்கோப்பை இங்கிருந்து இன்னும் 2 வருடங்கள் தொலைவில் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். எனவே நாம் நிகழ்காலத்தில் இருப்பது மிகவும் முக்கியம். எங்கள் அணிக்குள் வரும் இளம் வீரர்கள் தங்களுடைய வாய்ப்பைப் பிடித்துக் கொள்கிறார்கள். தரமான வீரரான ருதுராஜ் இந்தியா ஏ அணிக்காக வெளிப்படுத்திய ஆட்டத்தால் இத்தொடரில் வாய்ப்பு வழங்க விரும்பினோம்”
இதையும் படிங்க: 400 அடிப்பாங்கன்னு நினச்ச தெ.ஆ’வை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற அவங்க தான் காரணம்.. ராகுல் பேட்டி
“2வது போட்டியில் நாங்கள் அழுத்தத்தில் இருந்த போது சதமடித்த அவர் தமக்குக் கிடைத்த வாய்ப்பை இரு கைகளால் பிடித்துக் கொண்டுள்ளார். அதே போல ஜெய்ஸ்வால் எவ்வளவு தரமானவர் என்பதை நாம் பார்த்துள்ளோம். டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தும் அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இப்போது தான் தன்னுடைய கேரியரை துவக்கியுள்ளார். எனவே ருதுராஜ் போல அவருக்கும் பெரிய வருங்காலம் இருக்கும் என்று நம்பலாம்” எனக் கூறினார்.



