IND vs SL : ராகுலுக்கு பதில் 2023 உ.கோ’யில் ரோகித்துடன் அவர் தான் சரியான தொடக்க வீரர் – பேட்டிங் வரிசையை வெளியிட்ட கம்பீர்

Gautam Gambhir Rohit Sharma.jpeg
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் ஏமாற்ற தோல்வியை சந்தித்தது. அதில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட ஒரு சிலரை தவிர்த்து சுமாராக செயல்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களை கழற்றிவிட்டு 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்கும் வேலையை பிசிசிஐ துவங்கியுள்ளது. இருப்பினும் 2023ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் கடைசி வாய்ப்பாக ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் அடங்கிய முதன்மை அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதுடன் நல்ல பார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலி விளையாடுவதை அனைவருமே விரும்புகிறார்கள். அதே போல் கடந்த 2 வருடங்களாகவே தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் ரோகித் சர்மா கேப்டன் என்ற முறையில் நிச்சயமாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் மற்றொரு தொடக்க வீரராக கேஎல் ராகுல் களமிறங்குவார் என்றும் நம்பப்படுகிறது.

- Advertisement -

ராகுல், கில் வேண்டாம்:
அதை விட 2022 ஐபிஎல் தொடருக்குப் பின் சந்தித்த காயத்தால் பார்மை இழந்து திண்டாடும் அவர் ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தடவலாக பேட்டிங் செய்தது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது. இருப்பினும் துணை கேப்டன் என்பதற்காக தொடர்ந்து வாய்ப்பு பெற்று வந்த அவருடைய பதவியை அடுத்ததாக நடைபெறும் இலங்கை ஒருநாள் தொடரில் பிசிசிஐ பறித்துள்ளது. எனவே 2023 உலக கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் அடுத்ததாக நடைபெறும் இலங்கை ஒருநாள் தொடரில் அவர் தொடக்க வீரராக களமிறங்குவாரா அல்லது சமீப காலங்களில் அசத்தி வரும் சுப்மன் கில் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதமடித்து சாதனை படைத்த இஷான் கிசான் 2023 உலக கோப்பையில் ரோகித் சர்மாவுடன் களமிறங்குவதற்கு சந்தேகமின்றி தகுதியானவர் என முன்னாள் வீரர் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார். குறிப்பாக விக்கெட் கீப்பிங்க்கும் செய்வார் என்பதால் இசான் கிசானுக்கு அடுத்ததாக நடைபெறும் இலங்கை ஒருநாள் தொடரில் இப்போதே வாய்ப்பளித்து வளர்க்க வேண்டுமென தெரிவிக்கும் அவர் விராட் கோலி, சூரியகுமார், ஷ்ரேயாஸ் ஐயர், பாண்டியா ஆகியோர் அடுத்தடுத்த பேட்டிங் இடங்களில் விளையாட தகுதியானவர்கள் என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய விவாத நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த விவாதமே எனக்கு ஆச்சரியமளிக்கிறது. ஏனெனில் நமது அணியில் ஒருவர் கடந்த இன்னிங்ஸில் இரட்டை சதமடித்துள்ளார். அதனாலேயே இந்த விவாதம் முடிந்து விட்டது. இதில் விவாதிக்க ஒன்றுமில்லை அது இசான் கிசான் தான். “பேட்டிங்க்கு சவாலான கால சூழ்நிலையில் ஓரளவு நல்ல எதிரணிக்கு எதிராக அதுவும் அவர்களுடைய சொந்த மண்ணில் இரட்டை சதமடித்த அவர் கண்டிப்பாக விளையாட வேண்டும்”

“அதுவும் 35 ஓவரிலேயே 200 ரன்கள் அடித்த அவரை தாண்டி உங்களால் பார்க்க முடியுமா? அவருக்கு நீங்கள் நீண்ட வாய்ப்பு கொடுக்க வேண்டும். மேலும் அவர் விக்கெட் கீப்பிங் செய்யும் திறமையும் கொண்டவர். எனவே அவர் உங்களுக்கு 2 வேலையை செய்து கொடுப்பார். இதுவே வேறு யாராவது இரட்டை சதமடித்திருந்தால் நாம் இப்படி பேசியிருக்க மாட்டோம். அவர்களைப் பற்றி தொடர்ந்து பேசியிருப்போம். எனவே ரோஹித் – இஷான் ஆகியோர் ஓப்பனிங் செய்வதை தாண்டி நீங்கள் பார்க்க முடியாது”

இதையும் படிங்க: புதிய தெம்பால் இந்தியாவில் சம்பவம் செய்வோம், பார்டர் – கவாஸ்கர் கோப்பை நெருப்பை இப்போதே பற்ற வைத்த வார்னர்

“3இல் விராட், 4இல் சூரியகுமார், 5இல் ஷ்ரேயாஸ், 6இல் பாண்டியா ஆகியோர் கடந்த ஒன்றரை வருடங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் உலகக் கோப்பையில் விளையாடத் தகுதியானவர்கள். அதில் ஷ்ரேயாஸ்க்கு ஷார்ட் பால் பிரச்சனை இருந்தாலும் அவரால் அதை சமாளிக்க முடியும். அனைவரும் எல்லாவற்றிற்கும் எதிராக சிறந்தவராக இருக்க முடியாது. எனவே சூழ்நிலையை சமாளிக்க தெரிந்தவர்கள் இருக்கும் போது 5இல் ஸ்ரேயாஸ் 6இல் பாண்டியா ஆகியோரை தாண்டி உங்களால் பார்க்க முடியாது” என்று கூறினார்.

Advertisement