புதிய தெம்பால் இந்தியாவில் சம்பவம் செய்வோம், பார்டர் – கவாஸ்கர் கோப்பை நெருப்பை இப்போதே பற்ற வைத்த வார்னர்

Warner
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கிரிக்கெட் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா 2 போட்டிகளின் முடிவில் 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றுள்ளது. அந்தத் தொடரில் மெல்போர்னில் நடைபெற்ற 2வது போட்டியில் இரட்டை சதமடித்த டேவிட் வார்னர் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரமான அவர் கடந்த 2020 ஜனவரிக்கு பின் பார்மை இழந்து சதமடிக்க முடியாமல் தவித்ததால் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். அதை அப்போட்டியில் 1080 நாட்கள் கழித்து இரட்டை சதமடித்து அடித்து நொறுக்கிய அவர் தற்போது நல்ல பார்முக்கு திரும்பியுள்ளார்.

மேலும் தன்னுடைய 100வது போட்டியில் 200* ரன்கள் குவித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய 100வது போட்டியில் இரட்டை சதமடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையும் படைத்தார். அதனால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ள அவர் அடுத்ததாக இந்தியாவில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வெல்வதே தன்னுடைய அடுத்த இலக்கு என்று கூறியுள்ளார். குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் ஏற்கனவே புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் முதலிரண்டு இடங்களில் உள்ளன.

- Advertisement -

சம்பவம் செய்வோம்:
அதில் ஏற்கனவே முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவை ஏதோ ஒரு வகையில் தோற்கடித்தால் மட்டுமே 2023 ஜூன் மாதம் நடைபெறும் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற கட்டாயத்தில் இந்தியா களமிறங்குகிறது. மறுபுறம் இந்தியாவை தோற்கடித்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து பைனலுக்கு தகுதி பெற ஆஸ்திரேலியா முயற்சிக்கவுள்ளது. அதை விட இந்தியாவை கடைசியாக அதன் சொந்த மண்ணில் கடந்த 2004/05இல் தோற்கடித்திருந்த ஆஸ்திரேலியா 17 வருடங்களாக சந்தித்து வரும் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க போராட உள்ளது.

அந்த நிலையில் தற்போது அடித்துள்ள இரட்டை சதத்தால் கிடைத்துள்ள உத்வேகத்துடன் இந்தியாவை தோற்கடித்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் கோப்பையை வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவிக்கும் டேவிட் வார்னர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்தியாவில் வென்று இங்கிலாந்திலும் வென்று முழுமையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வதே என்னுடைய எக்ஸ்ட்ரா உத்வேகமாகும். அந்த போட்டிகளில் தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நான் விளையாடுவதை விரும்புவதாக என்னிடம் கூறியுள்ளார்கள். எனவே இப்போதும் என்னால் அணிக்கு என்ன எனர்ஜியை கொண்டு வர முடியும் என்பது எனக்கு தெரியும்”

- Advertisement -

“மேலும் இந்தியாவில் பெரும்பாலும் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் இருக்கும் என்பதால் அதற்காக நாங்கள் தயாராக வேண்டும் என்பதையும் அறிவோம். மேலும் அந்தத் தொடரில் வித்தியாசமான மைதானங்கள் இருக்கும். குறிப்பாக நாக்பூர் மற்றும் டெல்லியில் நல்ல வறண்ட மைதானங்கள் காணப்படும். மேலும் தரம்சாலா மைதானம் வித்தியாசமானது. அங்கே கடந்த முறை நாங்கள் விளையாடிய போது அந்த போட்டியை வென்றிருக்க வேண்டும். ஆனால் முக்கிய நேரத்தில் தடுமாறி எங்களை நாங்களே தோற்கடித்துக் கொண்டோம்”

“அந்த வகையில் இந்தியாவில் விளையாடுவது எப்போதுமே மிகப்பெரிய சவாலாகும். ஆனால் அந்தத் தொடரின் வெற்றி என்பது கடந்த பாகிஸ்தான் தொடரில் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் பேட்டிங் செய்ததை பொறுத்து அமையும். அதே போல் பந்து வீச்சுத் துறையில் நாங்கள் மிகச் சிறப்பாக செயல்பட உள்ளோம். குறிப்பாக எங்களிடம் உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர் நேதன் லயன் உள்ளார். மேலும் இந்தியாவில் சுழல் அதிகமாக எடுபடும் என்பதால் நாங்கள் 2 ஸ்பின்னர்களுடன் விளையாட திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.

இதையும் படிங்கஇலங்கை அணிக்கு எதிராக இவர் கடுமையான நெருக்கடியை கொடுப்பார் – சங்கக்காரா வெளிப்படை

அதாவது இந்தியாவுக்கு அருகில் இருக்கும் பாகிஸ்தானில் கடந்த மார்ச் மாதம் நடந்த டெஸ்ட் தொடரில் 1 – 0 (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு பயன்படுத்திய யுக்திகளை பயன்படுத்தி பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்வோம் என்று வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இப்படி ஆரம்பத்திலேயே அனல் பறக்கத் துவங்கியுள்ள இத்தொடர் வரும் பிப்ரவரி 9ஆம் தேதியன்று நாக்பூரில் துவங்குவது குறிப்பிடத்தக்கது.

Advertisement