
இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் முக்கிய பங்காற்றினார். ஏனெனில் 2007இல் 75 ரன்கள் அடித்த அவர் 2011இல் 97 ரன்கள் அடித்து தோனி தலைமையில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார். ஓய்வுக்கு பின் வர்ணனையாளராக தோனி, விராட் கோலி ஆகியோரை தைரியமாக விமர்சித்து வரும் அவர் தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் ஆலோசகாராக செயல்பட்டு வருகிறார்.
அவருடைய தலைமையில் வரலாற்றிலேயே முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த ஃபைனலுக்கும் முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. மேலும் சுனில் நரேனை மீண்டும் ஓப்பனிங்கில் களமிறக்கியது போன்ற அவருடைய முடிவுகள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அப்படிப்பட்ட திறமையை கொண்ட கெளதம் கம்பீர் பொதுவாகவே சிரிக்காமல் கொஞ்சம் இறுக்கமான முகத்துடன் அடிக்கடி ஆவேசப்படக்கூடிய நபராக அறியப்படுகிறார்.
நெருப்பான பதில்:
இந்நிலையில் ஏன் நீங்கள் அடிக்கடி சிரிப்பதில்லை என்று யூடியூப் நிகழ்ச்சியில் அவரிடம் ரவிச்சந்திரன் அஸ்வின் கேட்டார். அதற்கு கௌதம் கம்பீர் பதிலளித்தது பின்வருமாறு. “எனக்கு புரியவில்லை. சில சமயங்களில் சிரிக்காததால் இவர் சீரியஸானவர், எரிச்சலுடன் இருக்கக்கூடியவர், விளிம்பில் நடப்பவர், எப்போதும் விளையாட்டின் முகத்துடன் இருப்பவர் என்று மக்கள் பேசுகின்றனர்”
“இருப்பினும் அந்த மக்கள் நான் சிரிப்பதை பார்ப்பதற்காக மைதானத்திற்கு வருவதில்லை. அவர்கள் தங்களுடைய அணி வெற்றி பெறுவதைப் பார்ப்பதற்காக வருகின்றனர். அது மாதிரியான தொழிலில் தான் நாங்கள் இருக்கிறோம். எனவே சிரிப்பை வைத்து என்னால் உதவ முடியாது. நான் பொழுதுபோக்கில் இல்லை. நான் பாலிவுட் நடிகர் கிடையாது. நான் கார்ப்பரேட் கிடையாது. நான் கிரிக்கெட்டர்”
“உடைமாற்றும் அறைக்கு வெற்றியாளராக திரும்புவதே என்னுடைய வேலையாகும். அதிர்ஷ்டவசமாக துரதிஷ்டவசமாக வெற்றி பெறும் உடைமாற்றும் அறையே மகிழ்ச்சி நிறைந்த அறையாக இருக்கும். எனக்காக போராடுவதற்கும் எனது அணியினருக்காக போராடுவதற்கும் எதிரணியை முறியடிப்பதற்கும் விளையாட்டின் விதிமுறைக்குள் முடிந்த அனைத்தையும் செய்வதற்கு எனக்கு எல்லா உரிமையும் உண்டு. அதற்காக சிலர் அவர் மிகவும் கடினமானவர் குறிப்பிட்ட வழியில் விளையாடுகிறார் என்று சொல்வார்கள்”
இதையும் படிங்க: கழற்றி விட்டாங்கன்னு யார் சொன்னா.. 2024 டி20 உ.கோ இந்திய அணியில் இடம் கிடைக்காதது பற்றி ரிங்கு
“ஆம் நான் அப்படி செய்கிறேன். ஏனென்றால் அது எனது திறனை சிறப்பாக செய்ய உதவுகிறது. அது என்னுடைய குணாதிசயம். என்னைப் பொறுத்த வரை அது ஒரு ஆவேசம். நான் உண்மையில் வெற்றி பெற வேண்டும் என்று வெறித்தனமாக இருக்கிறேன். அதில் என்ன தவறு? நான் வெற்றிக்காக வெறித்தனமாக இருக்கிறேன். அதுவே எனக்குள்ள பிரச்சனை” என்று கூறினார். இதை பார்க்கும் ரசிகர்கள் இப்படிப்பட்ட கோட்பாட்டை கொண்ட இவரை டிராவிட்டுக்கு பின் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமியுங்கள் என்று வியப்புடன் பாராட்டுகின்றனர்.