இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது.
அந்த தோல்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் இங்கிலாந்து தொடரில் அவர்களை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்ததாக செய்திகள் வெளிவந்தன. அதற்கு முன்பாக முதலில் ஓய்வு பெற்ற ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் விடைபெற்றது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ரோஹித், கோலி போனா என்ன:
பொதுவாக இங்கிலாந்து மண்ணில் சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி வரை பெரும்பாலான இந்திய ஜாம்பவான் வீரர்கள் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிக்கத் தடுமாறியுள்ளனர். அப்படிப்பட்ட நிலையில் இம்முறை விராட் கோலி, ரோஹித் சர்மா இல்லாமல் விளையாடும் இந்திய அணி இளம் வீரர்களுடன் இங்கிலாந்தில் விளையாடுகிறது. அதனால் இம்முறையும் இங்கிலாந்து மண்ணில் இந்தியா வெல்லும் என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் ஜஸ்ப்ரித் பும்ரா இல்லாததால் இந்தியா கோப்பையை வெல்லாது என்று பலரும் சொன்னதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அதையும் தாண்டி திறமையான வீரர்களால் கோப்பையை வென்றதைப் போல் தற்போது விராட் கோலி, ரோஹித் இல்லாமல் இளம் வீரர்களை வைத்து இங்கிலாந்தில் வெல்வோம் என்று கம்பீர் உறுதியாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
கம்பீர் உறுதி:
“ஆம் நாங்கள் 2 அனுபவமிக்க சீனியர்கள் இல்லாத சூழ்நிலையைப் பெற்றுள்ளோம். சில நேரங்களில் இதுவே மற்ற வீரர்கள் தங்களுடைய கையை உயர்த்தி நான் தயாராக இருக்கிறேன் என்று சொல்வதற்கான வாய்ப்பு என நம்புகிறேன். ஆம் இது கடினமாக இருக்கும். ஆனால் இங்கிலாந்தில் தங்களுடைய கையை உயர்த்தக்கூடிய வீரர்கள் எங்களுக்கு இருப்பார்கள். சொல்லப்போனால் சாம்பியன்ஸ் டிராபியில் ஜஸ்ப்ரித் பும்ரா இல்லாத போது இதே கேள்வியை என்னிடம் கேட்டார்கள்”
இதையும் படிங்க: இதை செய்யலன்னா 2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலிக்கு வாய்ப்பு கஷ்டம் தான்.. கம்பீர் மறைமுகம்
“அப்போதும் இதே விஷயத்தை நான் சொன்னேன். அதாவது ஒருவர் தவற விடும் வாய்ப்பு மற்றொருவர் நாட்டுக்காக ஸ்பெஷலாக ஏதேனும் சாதிப்பதற்கான வாய்ப்பாகும். அந்த வாய்ப்புக்காக எங்களுடைய இளம் வீரர்கள் காத்திருப்பதாக நம்புகிறேன்” என்று கூறினார். அத்துடன் ரோஹித், கோலியை தாங்கள் ஓய்வு பெற வற்புறுத்தவில்லை என்று கம்பீர் கூறியுள்ளார். ஓய்வு என்பது தனி நபர்களின் சொந்த முடிவு என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



