இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அக்டோபர் பதினாறாம் தேதி பெங்களூரு நகரில் துவங்கும் அந்தத் தொடரில் வென்று 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற இந்தியா போராட உள்ளது. சமீபத்தில் கான்பூரில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 2 நாட்கள் ஆட்டம் மழையால் ரத்தானது.
அதனால் ட்ராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்தப் போட்டியில் கடைசி 2 நாட்களில் வங்கதேசத்தை டி20 போல அடித்து நொறுக்கிய இந்தியா அற்புதமான வெற்றி பெற்றது. ஆனால் இங்கிலாந்து அணி பஸ்பால் என்று சொல்லிக்கொண்டு அனைத்து நேரங்களிலும் அதிரடியாக விளையாட முயற்சிக்கிறது. மறுபுறம் இந்திய அணி சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடி வெற்றி கண்டது பலரிடமும் பாராட்டுகளை பெற்றது.
புதிய இந்திய அணி:
எனவே இங்கிலாந்தின் பஸ்பால் அணுகுமுறையை விட இந்தியா தான் சிறந்த அணுகுமுறையை பின்பற்றுவதாக பலரும் பாராட்டினர். இந்நிலையில் தற்போதைய இந்திய டெஸ்ட் அணி ஒரே நாளில் 400 – 500 ரன்கள் அடிக்க தயங்காது என்று புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அதே போல 2 நாட்கள் போராடி டெஸ்ட் போட்டியை காப்பாற்றவும் தயாராக உள்ளதாக கம்பீர் கூறியுள்ளார்.
எனவே தங்களுடைய அதிரடியான ஸ்டைலில் விளையாடும் இந்திய வீரர்களை தடுக்கப் போவதில்லை என்று தெரிவிக்கும் கம்பீர இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாங்கள் இந்திய அணி ஒரு நாளில் 400 ரன்கள் குவிப்பதை விரும்புகிறோம். தேவைப்பட்டால் டெஸ்ட் போட்டியை காப்பாற்ற 2 நாட்கள் பேட்டிங் செய்ய வேண்டும். இது போன்ற வளர்ச்சி மற்றும் பன்முகத்தன்மையை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்”
ஒரே நாளில் 500:
“அதுதான் உண்மையான டெஸ்ட் கிரிக்கெட்டாகும். அந்த இரண்டையும் செய்யும் பேட்ஸ்மேன்கள் எங்களிடம் உள்ளனர். எப்போதும் வெற்றிக்காக விளையாடுவதே எங்களுடைய முதல் இலக்கு. ஒருவேளை டிரா செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தால் அது தான் எங்களுடைய 2, 3வது இலக்காக இருக்கும். அதற்காக இயற்கையில் அதிரடியாக விளையாடக் கூடியவர்களை நாங்கள் நிறுத்தப் போவதில்லை”
இதையும் படிங்க: 2008இல் பாத்த விராட் கோலியிடம் இன்னும் இது மாறல.. அந்த ரன்ஸ் அடிப்பாரு.. பயிற்சியாளர் கம்பீர் ஆதரவு
“ஒரு நாளில் 400 – 500 ரன்கள் அடிப்பவர்களை நாங்கள் ஏன் நிறுத்த வேண்டும். டி20 கிரிக்கெட்டில் நான் எப்போதும் அதிக பந்தயத்துக்கு அதிக பரிசு என்ற அணுகுமுறையை பின்பற்றுகிறேன். அதைப் பின்பற்றி நீங்கள் 100 ரன்களுக்கு கூட அவுட்டாகலாம். ஆனால் இப்படித்தான் நாங்கள் விளையாட விரும்புகிறோம். இப்படித்தான் நாங்கள் மக்களை பொழுது போக்க விரும்புகிறோம்” என்று கூறினார்.



