நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்தியா தோற்றுள்ளது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் 2012க்குப்பின் சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தோல்வியை பதிவு செய்துள்ளது.
அந்த தோல்விகளுக்கு நியூசிலாந்து பவுலர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது. குறிப்பாக முதல் போட்டியில் வேகத்துக்கு சாதகமான பிட்ச்சில் 46க்கு ஆல் அவுட்டாகும் அளவுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடி தோல்விக்கு காரணமானார்கள். 2வது போட்டியில் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் இந்தியா 156க்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்திக்க பேட்ஸ்மேன்கள் முக்கிய காரணமானார்கள்.
தடுப்பாட்டத்தில் சிக்கல்:
அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்டுகள் விழும் போது எப்படி நிதானத்துடன் தடுப்படுப்பாட்டம் விளையாட வேண்டும் என்பதை இந்திய பேட்ஸ்மேன்கள் மறந்து விட்டார்களா? என்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அதிகமாக டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதாலேயே டெஸ்ட் போட்டிகளில் அவ்வப்போது இந்திய பேட்ஸ்மேன்களின் தடுப்பாட்டம் உடைவதற்கு காரணம் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் வருங்காலத்தில் அதை முன்னேற்றுவதற்கான வேலையை செய்து வருவதாகவும் கம்பீர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உலகம் முழுவதிலும் நிறைய டி20 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் அதிகமாக விளையாடுவதாலேயே வீரர்கள் தங்களுடைய தடுப்பாட்டத்தில் தடுமாறுகிறார்கள். ஆனால் வெற்றிகரமான வீரர்கள் எந்த ஃபார்மட்டாக இருந்தாலும் வலுவான தடுப்பாட்டத்தை கொண்டிருப்பார்கள்”
கம்பீர் விளக்கம்:
“எனவே தடுப்பாட்டத்தின் முக்கியத்துவம் பற்றி நாங்கள் எங்கள் வீரர்களிடம் தொடர்ந்து சொல்லி வருகிறோம். இதற்காக கடினமாகவும் உழைத்து வருகிறோம். எனவே அதனுடைய முடிவை நம்மால் பார்க்க முடியும். இப்போதெல்லாம் பந்தை கடினமாக அடிக்கிறார்கள். அதனால் 8 – 10 வருடத்திற்கு முன் மென்மையான கைகளுடன் விளையாடிய ஆட்டத்தை நீங்கள் மறக்க நேரிடுகிறது”
இதையும் படிங்க: இதுல என்ன தப்பு? இதை மூடி மறைக்கல வலிக்கட்டும்.. இந்தியாவின் 12 வருட அவமான தோல்வி பற்றி கம்பீர் பேட்டி
“உண்மையில் டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டிலும் வெற்றிகரமாக விளையாடும் வீரர் தான் முழுமையான கிரிக்கெட்டர். ஆனால் வருங்காலத்தில் நமது அணியில் மட்டுமின்றி உலகின் பல்வேறு அணிகளிலும் இந்த பிரச்சனையை பார்க்க முடியும். ஏனெனில் நீங்கள் டி20 கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடும் போது குறைவான வீரர்கள் மட்டுமே தடுப்பாட்டத்தை விளையாடுவதை பார்க்க முடியும்” என்று கூறினார். இதையடுத்து 3வது போட்டி நவம்பர் ஒன்றாம் தேதி துவங்குகிறது.



