நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளில் தோற்றுள்ள இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் ஒரு தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. அதுபோக 12 வருடங்களுக்கு பின் தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் அவமானத் தோல்வியை பதிவு செய்துள்ளது.
இந்த தோல்விகளுக்கு சுழலுக்கு சாதகமான புனே ஆடுகளத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது. அதனால் தரமான சுழல் பந்துகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்பதை இந்திய பேட்ஸ்மேன்கள் மறந்து விட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் அவற்றை இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மறுத்துள்ளார்.
கம்பீர் மறுப்பு:
மேலும் அதிகமான டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதாலேயே அவ்வப்போது சுழலுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுவதாக அவர் கூறியுள்ளார். ஆனால் இந்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரை வென்று இந்தியர்களை பெருமைப்படுத்துவோம் என்றும் கம்பீர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“நான் அப்படி நினைக்கவில்லை. சில நேரங்களில் நீங்கள் நன்றாக விளையாடும் எதிரணிக்கு பாராட்டு கொடுக்க வேண்டும். மிட்சேல் சான்ட்னர் கடந்த போட்டியில் அபாரமாக செயல்பட்டார். ஆனால் ஆம் முன்னோக்கி செல்லும் போது அதை சரி செய்ய நாங்கள் கடினமாக உழைப்போம். இதற்காக எங்கள் வீரர்கள் கடினமாக உழைத்து வருகிறார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றி தான் முக்கியம்”
ஆஸ்திரேலிய தொடர்:
“ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் எங்களுடைய பேட்ஸ்மேன்களின் திறமை குறைந்ததாக நான் கருதவில்லை. இவை அனைத்தும் கடினமாக உழைத்து முன்னேறுவதை பற்றியதாகும். அதிகமான டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதால் சில நேரங்களில் சில வீரர்களின் தடுப்பாட்டம் தடுமாறுகிறது. அடுத்ததாக 3வது போட்டியில் வெற்றி பெற்று அந்த வெற்றியுடன் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளோம்”
இதையும் படிங்க: 500 – 600 ரன்ஸ் அடிப்பாங்க.. ஐபிஎல் ஏலத்தில் அவர் 25 – 30 கோடிக்கு விலை போவாரு.. ஆகாஷ் சோப்ரா கணிப்பு
“அங்கே நாட்டுக்காக ஸ்பெஷலான விஷயத்தை சாதிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது எங்களுக்கு தெரியும். நாங்கள் 140 கோடி இந்தியர்களை பிரதிநிதுவப்படுத்துகிறோம்” என்று கூறினார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே நாளில் 400 ரன்கள் அடிப்பது அல்லது தேவைப்பட்டால் 2 நாட்கள் பேட்டிங் செய்து தோல்வியை தவிர்க்க போராட வேண்டுமென்று கம்பீர் கூறியுள்ளார். அது போன்ற அணுகு முறையை இந்திய அணியில் உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



