இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு வழியாக சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடுவது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கேரளாவை சேர்ந்த அவர் 2015ஆம் ஆண்டு அறிமுகமாகி 2021 வரை நிலையான வாய்ப்புகளை பெறாமல் இருந்தார். அதே சமயம் சமீப காலங்களில் கிடைத்த வாய்ப்புகளிலும் அவர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
அதனால் விமர்சனங்களை சந்தித்த அவரை புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் துவக்க வீரராக களமிறக்கினார். அந்த வாய்ப்பிலும் ஆரம்பத்தில் சஞ்சு சாம்சன் சுமாராக விளையாடினார். இருப்பினும் கடந்த வங்கதேச டி20 தொடரின் கடைசி போட்டியில் சதமடித்த அவர் தற்போது நடைபெறும் தென்னாப்பிரிக்க தொடரின் முதல் போட்டியிலும் சதமடித்தார்.
எனக்கு பாராட்டு வேண்டாம்:
அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் அடுத்தடுத்த போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனைகளையும் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் இப்படி சிறப்பாக செயல்படுவதற்கு கௌதம் கம்பீர் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். இந்நிலையில் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடுவதற்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
மேலும் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்படுவது ஆரம்பம் மட்டுமே என்று கம்பீர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அதற்கு நான் எதுவும் செய்யவில்லை. இது அவருடைய திறமை. இவை அனைத்தும் அவருக்கு சரியான இடத்தை கொடுத்து ஆதரவை கொடுப்பதை பற்றி விஷயமாகும். உண்மையில் இது அவருடைய கடின உழைப்பின் வெளிப்பாடு என்று நான் நினைக்கிறேன்”
திறமையான சாம்சன்:
“இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் செய்ய துவங்கியுள்ளது வெறும் ஆரம்பம் மட்டுமே. முடிவு கிடையாது. இதே ஃபார்மை அவர் முன்னோக்கி தொடர்வார் என்று நம்புகிறேன். அவரைப் போன்ற இளம் வீரர்கள் இப்படி சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றுவது நல்ல அறிகுறியாகும். அது வருங்கால இந்திய அணிக்கு நல்ல ஆரோக்கியம் நிறைந்த விஷயமாகும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ரோஹித், கோலியை குறைச்சு பேசாதீங்க.. ஆனா ஜெயிக்க போறது அவங்க தான்.. மைக் ஹசி பதிலடி
இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் வென்ற இந்தியா 2வது போட்டியில் தோற்றது. அதனால் 1 – 1* (4) என்ற கணக்கில் அந்த தொடர் சமநிலையில் இருக்கிறது. இதையடுத்து அந்த தொடரின் மூன்றாவது போட்டி நவம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் வெற்றி பெறுவதற்கு இந்திய அணியினர் தயாராகி வருகிறார்கள்.



