
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். பயிற்சியாளராக வந்தது முதல் அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்புகளை அள்ளி வழங்கி வருகிறார். அந்த வாய்ப்பில் பெரும்பாலான போட்டிகளில் சுமாராகவே பந்து வீசி வரும் ராணா இந்திய அணிக்கு பெரிய பின்னடைவைக் கொடுக்கிறார்.
அதன் காரணமாக ஏராளமான ரசிகர்களும் ஸ்ரீகாந்த் போன்ற சில முன்னாள் வீரர்களும் ராணாவின் தேர்வை விமர்சித்தனர். அதற்கு 23 வயது குழந்தை ராணாவை விமர்சிப்பது வெட்கக்கேடானது என்று பதிலடி கொடுத்த கௌதம் கம்பீர் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறார். அதைப் பார்க்கும் ரசிகர்கள் 100 டி20 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்த அர்ஷ்தீப்பை காட்டிலும் ராணாவுக்கு மட்டும் ஏன் கம்பீர் இவ்வளவு ஆதரவு கொடுக்கிறார்? என்ற ஆச்சரியத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இந்நிலையில் 2027 உலகக் கோப்பையில் 8வது இடத்தில் விளையாடும் வேகப்பந்து வீச்சாளருக்கு பேட்டிங் தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ராணாவை ஆல் ரவுண்டராக உருவாக்கி வருவதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ராணாவை வைத்து உருவாக்கி வரும் தமது மாஸ்டர்பிளான் குறித்து அவர் பேசியது பின்வருமாறு. “ராணா போன்றவர் பேட்டிங்கில் 8வது இடத்தில் பங்காற்றக்கூடிய வகையில் நாங்கள் உருவாக்க முயற்சித்து வருகிறோம்”
“அதுவே ஒரு முக்கிய காரணமாகும். அப்படித்தான் நம்மால் சமநிலையைக் கண்டறிய முடியும். ஏனெனில் இன்னும் 2 வருடங்களில் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பையில் நமக்கு 3 முழுமையான வேகப்பந்து வீச்சாளர்களும் தேவை. எனவே ராணா பௌலிங் ஆல் ரவுண்டராக உருவானால் அது எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும்”
“ஏனெனில் ஜஸ்ப்ரித் பும்ரா மீண்டும் வருவார். அர்ஷ்தீப், ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் திறனை நாம் தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் பார்த்தோம். அது நன்றாக இருந்தது. இருப்பினும் அந்த வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் நிறைய அனுபவத்தைக் கொண்டிருக்கவில்லை. அந்த 3 பவுலர்களும் 15க்கும் குறைவான போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர்”
இதையும் படிங்க: போரிங் ஐபிஎல் முடிவதற்குள் குழந்தையே வளந்துரும்.. அதுல ஐபிஎல் விட பிஎஸ்எல் தான் பெஸ்ட்.. வாசிம் அக்ரம்
“எனவே ராணா போன்றவரை 8வது இடத்தில் பேட்டிங்கில் பங்காற்றும் வகையில் நாங்கள் உருவாக்கி வருகிறோம். அது எங்களுக்கு சமநிலையையும் கொடுக்கும் என்று நினைக்கிறேன். இந்தத் திட்டம் வெற்றிகரமாக உருவாக நீண்ட தொலைவு இருக்கிறது” என்று கூறினார். அந்த வகையில் 2027 உலகக் கோப்பைக்காக ராணாவை இப்போதிலிருந்து கம்பீர் செதுக்கி வருவது குறிப்பிடத்தக்கது.