இந்திய கிரிக்கெட் அணி 2012 – 2024 வரை சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் உலக சாதனையுடன் வெற்றி நடை போட்டு வந்தது. ஆனால் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வந்தது முதல் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. குறிப்பாக கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வரலாறு காணாத ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தது.
தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 – 0 (2) என்ற கணக்கில் 25 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் தோல்வியைச் சந்தித்துள்ளது. அதிலும் கௌகாத்தியில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தங்களது மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்து மோசமான சாதனை படைத்துள்ளது.
தோல்விக்கான காரணம்:
இந்த தோல்விகளுக்கு சோதனை என்ற பெயரில் கௌதம் கம்பீர் செய்யும் மாற்றங்கள், ஒருதலைப்பட்சமான தேர்வுகள் முக்கிய காரணமாகிறது. அதே போல இந்திய பேட்ஸ்மேன்களும் சொந்த மண்ணில் சுழல் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திணறுவது தோல்விக்கு காரணமாகியுள்ளது. இந்நிலையில் விராட், ரோஹித், அஸ்வின் போன்ற சீனியர்கள் ஓய்வால் தற்போதைய இந்திய அணியில் அனுபவமற்ற இளம் வீரர்கள் நிறைந்திருப்பதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
அதுவே தோல்விக்கு காரணம் என்று தெரிவிக்கும் அவர் கொஞ்ச நேரம் கொடுத்தால் இதே இளம் இந்திய அணி கற்றுக்கொண்டு வெற்றிகளைப் பெறும் என்று கம்பீர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தோல்விக்கான பொறுப்பும் குற்றமும் என்னில் துவங்கி ஒவ்வொருவரின் மேலே இருக்கிறது என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளேன். அணியாக வெல்லும் நாங்கள் அணியாக தோற்கிறோம்”
கொஞ்சம் டைம் கொடுங்க:
“எனவே ஒருவரை மட்டும் குறை சொல்லாமல் அணியில் இருக்கும் அனைவரும் தோல்விக்கு பொறுப்பானவர்கள் என்று நான் சொல்வேன். இது தான் அணி விளையாட்டாகும். முதலில் நியூசிலாந்துக்கு எதிராக நாங்கள் வித்தியாசமான அணியைக் கொண்டிருந்தோம். தற்போதைய அணி வித்தியாசமானது. அந்த 2 அணிகளின் பேட்டிங் வரிசைக்கிடையே அனுபவத்தில் பெரிய வித்தியாசம் இருக்கிறது”
இதையும் படிங்க: ராஜினாமா செய்ய முடியாது.. இந்தியாவுக்கு நான் பெற்றுக்கொடுத்த அந்த வெற்றிகளை மறக்காதீங்க.. கம்பீர் பதிலடி
“எனவே நியூசிலாந்து தோல்வியுடன் தற்போதைய தோல்வியை ஒப்பிடுவது தவறான கதையாகும். அதற்காக கடந்த காலத்தில் இப்படி நடக்கவில்லை, இனிமேல் இப்படி நடக்காது என்று நான் சாக்கு சொல்ல மாட்டேன். ஆனால் தற்போது அணியின் டாப் 8இல் 4 – 5 பேட்ஸ்மேன்கள் 15க்கும் குறைவான டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்கள். எனவே அவர்கள் களத்தில் கற்றுக்கொண்டு வளர்வார்கள். தரமான எதிரணிக்கு எதிராக உங்களால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது எளிதல்ல. எனவே இளம் அணிக்கு நீங்கள் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.



