தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 15 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் தோற்றது. அடுத்ததாக கௌகாத்தியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா 408 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதன் வாயிலாக தெனாப்பிரிக்காவுக்கு எதிராக 2 – 0 (2) என்ற கணக்கில் 25 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியைச் சந்தித்தது.
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் அடிப்படையில் இந்தியா தங்களுடைய மிகப்பெரிய தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைத்தது. ஏற்கனவே கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக 3 – 0 (3) என்ற கணக்கிலும் இந்தியா சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தது. தற்போது இதையும் சேர்த்து சொந்த மண்ணில் இந்தியா அடுத்தடுத்த வருடங்களில் ஒயிட்வாஸ் தோல்வியைச் சந்தித்துள்ளது.
ராஜினாமா செய்ய முடியாது:
2014 – 2021 வரையிலான காலகட்டங்களில் விராட் கோலி தலைமையில் இந்தியா சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட தோற்றதில்லை. அப்படிப்பட்ட இந்திய அணி கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்தது முதல் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வருகிறது. சோதனை என்ற பெயரில் அவர் செய்யும் மாற்றங்கள், ஒருதலைபட்சமான தேர்வுகள் ஆகியவை தோல்விக்கு வித்திடுகின்றன.
அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கௌதம் கம்பீர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கௌதம் கம்பீர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்று கொடுத்ததை மறந்து விடாதீர்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியின் பயிற்சியாளர் வேலையைச் செய்வதற்கு நீங்கள் சரியானவர் என்று நினைக்கிறீர்களா?”
கம்பீர் பதிலடி:
“எனது வேலையைப் பற்றி பிசிசிஐ முடிவெடுக்கும். பயிற்சியாளராக பொறுப்பேற்ற போது நான் முக்கியமல்ல, இந்திய கிரிக்கெட்டே முக்கியம் என்று முதல் செய்தியாளர்கள் சந்திப்பிலேயே சொன்னேன். இப்போதும் நான் அதையே சொல்கிறேன். ஆனால் இதே கௌதம் கம்பீர் இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இளம் அணியை வைத்துக்கொண்டு நல்ல முடிவுகளைக் கொடுத்தார் என்பதை மக்களான நீங்கள் மறந்து விட்டீர்கள்”
இதையும் படிங்க: சச்சினின் அந்த வழியை பின்பற்றி ஜெய்ஸ்வால் விளையாடுனா நல்லா விளையாடுவாரு – டேல் ஸ்டெயின் அட்வைஸ்
“நிறைய மக்கள் நியூசிலாந்து தொடரில் சந்தித்த தோல்வியைப் பற்றி பேசுகின்றனர். ஆனால் இதே கம்பீர தலைமையில் தான் இந்தியா 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசியக் கோப்பையை வென்றது. அதை சீக்கிரம் மறந்து விட்டீர்கள். தற்போதைய அணி குறைந்த அனுபவத்தைக் கொண்டிருக்கிறது. எனவே அவர்கள் தொடர்ந்து கற்றுக் கொண்டால் அனைத்தையும் நமக்கு சாதகமாக திருப்புவார்கள் என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளேன்” என்று கூறினார்.



