ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி விரைவில் துபாய்க்கு செல்ல உள்ளது. அந்தத் தொடருக்கு தயாராகும் நோக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதனால் 2013க்குப்பின் சாம்பியன்ஸ் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் வெல்லும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.
இருப்பினும் அந்தத் தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தால் விலகியுள்ளது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2013க்குப்பின் 10 வருடங்களுக்கு மேலாக இந்தியா ஒரு ஐசிசி கோப்பையைக் கூட வெல்ல முடியாமல் திணறி வந்தது. அந்த சூழ்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற பும்ரா 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.
பும்ரா இல்லனாலும்:
அந்த வகையில் இந்திய பவுலிங் துறையின் முதுகெலும்பான அவர் இல்லாதது பெரிய பின்னடைவு என்பதை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்நிலையில் பும்ரா இல்லையென்றாலும் உலகத்தரமான முகமது ஷமி இருப்பதாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். கூடவே 2024 டி20 உலகக் கோப்பையை வெல்ல உதவிய அர்ஷ்தீப் சிங், திறமையான ஹர்ஷித் ராணாவும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
எனவே அவர்களை வைத்து இந்தியா சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கைத் தெரிவிக்கும் கம்பீர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா காயமடைந்தால் அது காயமடைந்ததாகவே அர்த்தம். அந்த இடத்தில் நான், கேப்டன் உட்பட யாராக இருந்தாலும் எதுவும் செய்ய முடியாது. ஜஸ்ப்ரித் பும்ரா தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்பது நமக்குத் தெரியும்”
இந்தியா வெல்லும்:
“ஆனால் ராணா, அர்ஷ்தீப், ஷமி ஆகியோர் தங்களுடைய கைகளை ஒன்றாக சேர்த்து இந்தியாவுக்காக உயர்த்துவார்கள். இது நாட்டுக்காக வெற்றியை பெற்றுக் கொடுக்க அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். அவர்களைப் போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை கொண்டிருப்பது நல்ல விஷயம். குறிப்பாக அனுபவம் தரம் ஆகியவற்றைக் கொண்டுள்ள ஷமியால் தனது கைகளால் என்ன செய்ய முடியும் என்பது நமக்குத் தெரியும்”
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்? தெளிவான பதிலளித்த – கவுதம் கம்பீர்
“நாங்கள் அவருடைய பணிச்சுமையை நிர்வகிக்க முயற்சிக்கிறோம். அதனாலேயே அவரை நாங்கள் 2 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட வைத்தோம். எனவே சாம்பியன்ஸ் டிராபியில் அவர் புத்துணர்ச்சியுடன் களமிறங்கி வெற்றியைப் பெற்றுக் கொடுக்கத் தயாராக இருப்பார் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.



