- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தலைப்பு செய்தியில் வர விரும்பல.. சிறந்த கேப்டன் கங்குலியா? தோனியா? என்ற கேள்விக்கு கம்பீர் பதில்

நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் இந்தியாவின் உலகக்கோப்பை நாயகர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். 2007 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் 75 ரன்கள் அடித்த அவர் பாகிஸ்தானுக்கு எதிராக தோனி தலைமையில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அதே போல 2011 உலகக் கோப்பை ஃபைனலில் 97 ரன்கள் அடித்த அவர் 28 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து மண்ணில் நீண்ட இன்னிங்ஸ் விளையாடி சாதனை படைத்துள்ள அவர் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். முன்னதாக ராகுல் டிராவிட் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோருடைய தலைமையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கௌதம் கம்பீர் அறிமுகமானார். ஆனால் எம்எஸ் தோனி தலைமையில் தான் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் இந்தியாவுக்கு மறக்க முடியாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

சிறந்த கேப்டன் யார்:
இந்நிலையில் நீங்கள் விளையாடியதில் சிறந்த இந்திய கேப்டன் யார் என்பது பற்றி சமீபத்திய பேட்டியில் கௌதம் கம்பீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு குறிப்பிட்டவரை சொன்னால் அது சர்ச்சையாக மாறிவிடும் என்று கம்பீர் பதிலளித்துள்ளார். இருப்பினும் தோனியுடன் மகிழ்ச்சியுடன் விளையாடியதாக தெரிவிக்கும் கம்பீர் அவர் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தியதாகவும் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது மிகவும் சர்ச்சைக்குரிய கேள்வி. அதற்கு பதிலளித்து நான் தலைப்புச் செய்தியாக வருவதற்கு விரும்பவில்லை. இங்கே ஒவ்வொருவரிடமும் பலம் மற்றும் பலவீனங்கள் இருக்கும். நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் தலைமையிலும் ஒருநாள் போட்டிகளில் சௌரவ் கங்குலி தலைமையிலும் அறிமுகமானேன். அனில் கும்ப்ளே தலைமையில் எனக்கு சிறந்த செயல்பாடுகள் அமைந்தது”

- Advertisement -

“அதே போல எம்எஸ் தோனி தலைமையிலும் நான் விளையாடியுள்ளேன். சொல்லப்போனால் அவருடைய தலைமையில் தான் நான் நீண்ட காலம் விளையாடினேன். தோனியுடன் நான் மகிழ்ச்சியாக இணைந்து விளையாடினேன். அவர் இந்திய அணியை வழி நடத்திய விதத்தையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டேன்” என்று கூறினார். முன்னதாக தோனியை பற்றி கம்பீர் பலமுறை கடுமையாக விமர்சனங்களை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: வங்கதேச அணிக்கெதிரான இன்றைய போட்டியிலும் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடையாது – விவரம் இதோ

இருப்பினும் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய வெற்றிகளை பெற்ற தோனி தான் இந்தியாவின் சிறந்த கேப்டன் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இந்த நிலைமையில் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட உள்ளார் என்ற செய்திகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -