
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 15 வருடங்கள் கழித்து இந்தியா தங்களது சொந்த மண்ணில் தோற்றது. எனவே தொடரை சமன் செய்ய 2வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது. ஆனால் அப்போட்டியில் தற்போது இந்தியா தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏனெனில் அப்போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 489 ரன்களை குவித்து பின்னர் இந்தியாவை 201 ரன்களுக்கு சுருட்டி வீசியது. அடுத்ததாக 288 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 260 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. இறுதியில் 549 என்ற மெகா இலக்கைத் துரத்தும் இந்தியா 4வது நாள் முடிவில் 29/2 என திண்டாடி வருகிறது.
கைவசம் 8 விக்கெட்டுகள் வைத்திருந்தாலும் இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடும் விதத்திற்கு இப்போட்டியில் போட்டியை டிரா செய்வதே கடினமாகப் பார்க்கப்படுகிறது. ஒருவேளை கடைசி நாளில் விக்கெட்டை விடாமல் போட்டியை ட்ரா செய்தாலும் 1 – 0 (2) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா தொடரை வெல்வது உறுதியாகியுள்ளது. எனவே கடைசி நாளில் 522 ரன்கள் தேவைப்படும் நிலையில் குறைந்தபட்சம் போராடி இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியைத் தவிர்க்குமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
முன்னதாக தோல்வியைத் தவிர்ப்பதற்காக 2 நாள் போராட வேண்டிய நிலை வந்தாலும் அதை இந்தியா செய்யும் என்று 2024இல் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்தார். இது பற்றி நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டிக்கு முந்தைய நாளில் அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் ஒரு நாளில் 400 ரன்கள் அடிக்கும் அணியாகவும், போட்டியை டிரா செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தால் 2 நாட்கள் விளையாடக்கூடிய அணியாகவும் இருக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் அத்தொடரில் 3 போட்டிகளில் ஒன்றைக் கூட டிரா செய்யாத இந்தியா 3 – 0 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் தோற்றது. எனவே இப்போதாவது அதை செய்து காட்டுவீர்களா? என்று கம்பீரையும் இந்திய அணியையும் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே சாடியுள்ளார். இது பற்றி ஜியோஹாட்ஸ்டார் நேரலை வர்ணனையில் அவர் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: தோற்பது உறுதி? 180 ரன்ஸ் அடித்து 21 வருட மோசமான பெரிய தோல்வியை இந்தியா தவிர்க்குமா?
“நீங்கள் அந்த வார்த்தைகளை எடுத்துக்கொண்டு சொன்ன வார்த்தைகளில் நடந்து காட்ட வேண்டும். அதை டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற உலகின் சிறந்த அணியான தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக செய்வதற்கான நல்ல வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. நாங்கள் வெற்றிக்காக விளையாடுகிறோம, இல்லையென்றாலும் டிரா செய்து தோல்வியைத் தவிர்ப்போம் என்பதைக் காண்பிக்க இதை விட உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்காது” என்று கூறினார்.