தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 15 வருடங்கள் கழித்து இந்தியா தோல்வியைச் சந்தித்தது. அதனால் தொடரை சமன் செய்ய நவம்பர் 22ஆம் தேதி கௌகாத்தியில் துவங்கிய 2வது போட்டியில் இந்தியா நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. ஆனால் அந்தப் போட்டியில் இந்தியா தோல்விகளில் சந்திக்கும் தருவாயில் தத்தளித்து வருகிறது.
அப்போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 489 ரன்கள் குவித்து வலுவான அடித்தளத்தைப் பெற்றது. அதிகபட்சமாக சீனுரான் முத்துசாமி சதத்தை அடித்து 109, மார்கோ யான்சென் 93 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய இந்தியா மோசமாக பேட்டிங் செய்து 201 ரன்களை மட்டுமே எடுத்தது.
தோல்வி உறுதி:
அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58, வாஷிங்டன் சுந்தர் 48 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக மார்கோ யான்சென் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக 288 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு இந்தியாவை பந்தாடி 260/5 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 94 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
இறுதியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு 549 என்ற பிரம்மாண்ட இலக்கை தென்னாப்பிரிக்கா நிர்ணயம் செய்துள்ளது. அதைத் துரத்தும் இந்தியா 4வது நாள் முடிவில் 27/2 என திணறி வருவதுடன் இன்னும் 522 ரன்கள் பின்தங்கியுள்ளது. வரலாற்றில் எந்த அணியும் கடைசி நாளில் 500+ ரன்கள் வெற்றிகரமாக சேசிங் செய்து வென்றது கிடையாது.
இந்தியா மோசமான சாதனையை தவிர்க்குமா:
அதிகபட்சமாக 1948 ஹெண்டிங்லே ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா டான் ப்ராட்மேன் உதவியுடன் 5வது நாளில் 404/3 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. ஆனால் இப்போட்டியில் இந்தியாவுக்கு கடைசி நாளில் 522 ரன்கள் தேவைப்படுகிறது. அதனால் இப்போட்டியில் இந்தியா தோல்வியை சந்திப்பது உறுதியாகியுள்ளது. ஒருவேளை டிரா செய்தாலும் 1 – 0 (2) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா தொடரை வெல்லும் என்பதால் அதுவும் தோல்விக்கு சமமானதாகவே பார்க்கப்படும்.
இதையும் படிங்க: கே.எல் ராகுல் இந்த ஒரு தொடருக்கு மட்டும் தான் கேப்டனாக இருப்பார்.. பி.சி.சி.ஐ வெளியிட்ட தகவல்
எனவே தற்காலிகமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தங்கள் சொந்த மண்ணில் மிகப்பெரிய தோல்வியை தவிர்க்குமா? என்பதே ரசிகர்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக இருக்கிறது. வரலாற்றில் 2004 நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 342 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே சொந்த மண்ணில் இந்தியா சந்தித்த பெரிய தோல்வியாகும். அந்த மோசமான வரலாற்றுச் சாதனை தோல்வியைத் தவிர்க்கவே இந்தியாவுக்கு இன்னும் 180 ரன்கள் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.



