இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் நான்கு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியானது இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
நாட்டுக்கு பெருமை சேர்க்க இதை செய்யுங்க : கவுதம் கம்பீர்
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது நாளை மறுதினம் ஜூலை 31-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்ய முடியும் என்பதனால் இந்த போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.
இதன் காரணமாக தற்போது இந்திய அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். கடைசியாக நடைபெற்று முடிந்த மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது தோல்வியிலிருந்து மீண்டு போட்டியை டிரா செய்த நிலையில் அதே உத்வேகத்துடன் இந்த ஓவல் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்வார்கள் என்று ரசிகர்களுடன் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் வீரர்களின் ஓய்வறையில் பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சில முக்கியமான கருத்துக்களை வீரர்களுடன் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நாம் இம்முறை இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடியுள்ள இந்த செயல்பாட்டை யாரும் மறக்க கூடாது. இங்கு நமக்கு கிடைத்த ஆதரவு மிகச் சிறப்பாக இருந்துள்ளது.
கடைசி ஐந்து வாரங்களாக இரு அணிகளுமே நல்ல விளையாட்டை வெளிப்படுத்தியுள்ளோம். ஆனாலும் இந்த தொடரின் கடைசி வாரத்தில் இருக்கும் நாம் கடைசியாக ஒரு முயற்சியை செய்து அடுத்த போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை சமன் செய்து நமது நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். அதை செய்த கையோடு தான் நாம் நாடு திரும்ப வேண்டும்.
இதையும் படிங்க : இந்தியா பயந்துடுச்சுன்னு சொன்ன ஹரி ப்ரூக்கிடம்.. 4வது நாளில் பயந்துட்டிங்களான்னு கில் கேட்கனும்.. கவாஸ்கர் பேட்டி
எனவே அடுத்த போட்டியில் வெற்றி பெற நம்மால் முடிந்த அனைத்தையும் கொடுப்போம் என வீரர்களிடம் கௌதம் கம்பீர் பேசியது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கௌதம் கம்பீரின் தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தடுமாற்றத்தை சந்தித்து வரும் வேளையில் இந்த தொடரினை இந்திய அணி ஒருவேளை இழக்கும் பட்சத்தில் அவரது பயிற்சியாளர் பதவிக்கும் ஆபத்து ஏற்படலாம்.



