
ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் கொண்டு வரப்பட்டார். கொல்கத்தா அணி கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற போது அந்த அணியின் ஆலோசகராக இருந்த கௌதம் கம்பீர் எடுத்த பல்வேறு முடிவுகள் அந்த அணிக்கு சாதகமாக அமைந்து அந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
அதனால் அவர் மீது கவனத்தை திருப்பிய இந்திய அணியின் நிர்வாகமான பிசிசிஐ அவருக்கு பயிற்சியாளர் பதவியை வழங்கியது. கௌதம் கம்பீரின் தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றிருந்தாலும் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் மோசமான தோல்விகளை சந்தித்து வருவது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதோடு கௌதம் கம்பீர் தனக்கு பிடித்தமான வீரர்களை அணியில் வைத்துக் கொண்டு அனுபவ வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை வெளியேற்ற முடிவு செய்து காய்களை நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் கம்பீரின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் என்றும் பேசப்பட்டு வருகிறது.
அதோடு இந்திய ஒருநாள் அணியில் தங்களது இடத்தை நிலை நிறுத்திக் கொள்ளவே அவர்கள் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் இன்றளவும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் கௌதம் கம்பீருடன் சுமுகமான ஒரு உறவில் இல்லை என்றும் அவர்களுக்கு இடையே ஒரு பனிப்போர் நிகழ்ந்து வருவதாகவும் பலரும் பேசி வருகிறார்கள்.
இந்த விவகாரம் பிசிசிஐ-க்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரை கௌதம் கம்பீர் வெல்லவில்லை என்றால் அவரது பயிற்சியாளர் பதவிக்கு சிக்கல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை மதிக்காமல் கெளதம் கம்பீர் தனியாக ஒரு முடிவினை எடுத்து அணித்தேர்வை செய்து வருவது நிர்வாகத்திற்கும் பிடிக்காமல் போகும் பட்சத்தில் பிசிசிஐ அவரை பதவிநீக்கம் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : கண்டிப்பா அபிமன்யு ஈஸ்வரன் டெஸ்ட் போட்டியில் இனி விளையாடுவார் – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து
ஏற்கனவே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பல்வேறு அனுபவ பயிற்சியாளர்கள் விண்ணப்பித்திருந்த வேளையில் பி.சி.சி.ஐ நேரடியாக கௌதம் கம்பீரை தேர்திருந்தது. இவ்வேளையில் அவர் மீது தொடர்ச்சியாக அதிருப்தி ஏற்பட்டால் நிச்சயம் அவரது பதவியை பறிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.