கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணியானது தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி பூஜ்யத்திற்கு இரண்டு (0-2) என்ற கணக்கில் இழந்திருந்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருந்தது.
அபிமன்யு ஈஸ்வரன் டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் : அஷ்வின் கருத்து
அந்த டெஸ்ட் தொடரின் போது துவக்க வீரராக அபிமன்யு ஈஸ்வரனுக்கு இடம் கிடைக்காதது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்திருந்தது. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு முறை டெஸ்ட் அணி அறிவிக்கப்படும் போதும் இந்திய அணியில் இடம்பெற்ற அவர் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமலேயே தற்போது இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய அவர் 66 பந்துகளில் 130 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். டெஸ்ட் வீரராக பார்க்கப்படும் இவர் டி20 போட்டிகளிலும் அதிரடியாக விளையாடியுள்ளது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
இந்நிலையில் டி20 போட்டியில் சதம் அடித்த அபிமன்யு ஈஸ்வரனை பாராட்டும் விதமாகவும் அதே வேளையில் பிசிசிஐ தேர்வை கிண்டல் செய்யும் விதமாகவும் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு சுவாரசியமான கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
அபிமன்யு ஈஸ்வரன் தற்போது டி20 போட்டியில் சதம் அடித்து விட்டார். இனிமேல் நிச்சயம் அவரை டெஸ்ட் போட்டியில் பார்க்கலாம் என கிண்டல் செய்யும் வகையில் அஷ்வின் பேசியுள்ளார். இப்படி அஸ்வின் பேசுவதற்கு காரணம் யாதெனில் : சமீபகாலமாகவே ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களையே இந்திய அணி டெஸ்ட் போட்டிக்கும் தேர்வு செய்து வருகிறது.
இதையும் படிங்க : இன்னும் எதும் மாறல.. விராட் கோலிக்கு எதிரா பந்து வீசுவது எரிச்சலா இருக்கு – மார்கோ யான்சென் புலம்பல்
அதோடு டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணியில் இடம் உறுதி என்று பார்க்கப்படும் நிலையில் அபிமன்யு ஈஸ்வரன் தற்போது டி20 போட்டியில் சதம் அடித்ததை அடித்து இப்படி ஒரு நகைச்சுவையான கருத்தை அஸ்வின் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



