
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்க உள்ளது. அதில் இந்திய அணி தங்களுடைய போட்டிகளை துபாய் மண்ணில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்கு முன் இந்திய பேட்டிங் துறையின் நம்பிக்கை நட்சத்திரங்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சுமாரான ஃபார்மில் இருப்பது ரசிகர்களுக்கு கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது.
அவர்களுடைய சுமாரான ஆட்டத்தால் சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் தோல்வியை சந்தித்த இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது. அதன் காரணமாக விமர்சனங்களை சந்தித்த அவர்கள் இருவருமே ரஞ்சிக் கோப்பையில் விளையாடினர். ஆனால் அங்கேயும் அந்த இருவருமே அரை சதம் கூட அடிக்காமல் ஏமாற்றத்தையே கொடுத்தார்கள்.
அப்படிப்பட்ட அவர்களை வைத்துக்கொண்டு இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை எப்படி வெல்லப்போகிறது என்பது ரசிகர்களின் கவலையாகும். இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் அனைத்துப் போட்டிகளுமே நாக் அவுட் போல இருக்கும் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அந்தத் தொடரில் இந்தியா கோப்பையை வெல்வதற்கு விராட் கோலி, ரோஹித் சர்மாவின் மதிப்புள்ள அனுபவம் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி கம்பீர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் பெரிய வேலையில் பங்காற்ற வேண்டியுள்ளது. அவர்கள் நாட்டுக்காக விளையாடும் ஆர்வம், பசியுடன் இருக்கிறார்கள். 50 ஓவர் உலகக் கோப்பையை விட சாம்பியன்ஸ் டிராபி மிகவும் வித்தியாசமான சவால் நிறைந்த தொடர். அதில் ஒவ்வொரு போட்டியும் நாக் அவுட் போல இருக்கும். எனவே நீங்கள் அத்தொடரில் எங்கேயும் தவற விட முடியாது”
“அந்தத் தொடரில் நாங்கள் நன்றாகத் துவங்கி கோப்பையை வெல்வோம் என்று நம்புகிறோம். அதற்கு நாங்கள் 5 போட்டிகளில் வெல்ல வேண்டும். என்னைப் பொறுத்தவரை விராட், ரோஹித் ஆகியோர் இந்திய அணிக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் நிறைய மதிப்பை சேர்க்க கூடியவர்கள். எனவே வெற்றிக்கு அவர்களும் மற்ற வீரர்களும் பசியுடன் இருப்பது முக்கியம். 23ஆம் தேதி நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மட்டுமே முக்கியம் என்ற எண்ணத்துடன் நாங்கள் சாம்பியன்ஸ் டிராபிக்கு செல்ல மாட்டோம்”
இதையும் படிங்க: லெஜெண்டாக வளர்ந்தாலும் பணிவு மாறாத கிங் கோலி.. அவுட்டாக்கிய பவுலருக்கு ஸ்பெஷல் பரிசு
“5 போட்டிகளும் முக்கியம். துபாயில் அனைத்து போட்டிகளையும் வெல்வதே எங்களுடைய பெரிய இலக்கு. தொடருக்கு மத்தியில் அந்தப் போட்டி முக்கியமானது என்றால் அதை நாங்கள் தீவிரமாகவும் எடுத்துக்கொள்வோம். இந்தியா பாகிஸ்தான் விளையாடும் போது உணர்வுகள் அதிகமாக இருக்கும். ஆனால் போட்டி அதே மாதிரியாக இருக்கும். என்னைப் பொறுத்த வரை அது பேட்டுக்கும் பந்துக்கும் இடையேயான போட்டியாகவே இருக்கும்” என்று கூறினார்.